thoothukudi sterlite plant incident supreme court tn govt

Advertisment

மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிக்க அனுமதி வேண்டும் என்று வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவில், "தூத்துக்குடி மாவட்டத்தில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரித்து, அதை இலவசமாக வழங்க அனுமதி வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்ஸிஜன் உற்பத்திக் கூடத்தில் நாள் ஒன்றுக்கு 500 டன் ஆக்ஸிஜன் தயாரிக்க முடியும்” எனக் குறிப்பிட்டிருந்தது.

இந்த மனு நேற்று (22/04/2021) உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, "நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து, ஆக்ஸிஜன் தேவை உயர்ந்துள்ளதால், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் மட்டும் தயாரிக்க அனுமதி தரலாம்" என தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, "கரோனா தடுப்பூசி, ஆக்ஸிஜன் பற்றாக்குறை உள்ளிட்டவை பற்றிய அனைத்து விஷயங்களையும் நாங்களே முன்வந்து விசாரிப்போம்” என்று கூறியதுடன், இவ்வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வேவை நியமித்து விசாரணையை இன்றைக்கு (23/04/2021) ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தனர்.

Advertisment

அதன் தொடர்ச்சியாக, இந்த வழக்கு இன்று (23/04/2021) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வைத்தியநாதன், "ஆக்ஸிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக்கூடாது. ஸ்டெர்லைட் ஆலைக்குப் பதில் நாடு முழுவதும் உள்ள வேறு ஆலைகளில் ஆக்ஸிஜனை உற்பத்திசெய்யுங்கள். ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தூத்துக்குடி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (23/04/2021) காலை நடைபெற்ற கருத்துக் கேட்பு கூட்டத்தில் ஆலையைத் திறக்க பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர். கடந்த 2018ஆம் ஆண்டு நடந்தது போல், தூத்துக்குடியில் மீண்டும் ஒரு துப்பாக்கிச் சூடு நடக்க விரும்பவில்லை. 2018ஆம் ஆண்டு சம்பவம் நடந்தாலும் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை இன்னும் தொடர்கிறது" எனதெரிவித்தார்.

இதையடுத்து, தலைமை நீதிபதி அமர்வு, "ஆக்ஸிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே ஏற்று நடத்தலாமே" என்று யோசனை தெரிவித்தனர்.

இதற்கு தமிழக அரசு வழக்கறிஞர், "ஆலையை நாங்கள் திறக்கலாம் என்றாலும் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை இருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலையை மக்கள் இன்னும் முழுமையாக நம்பவில்லை" என்றார்.

Advertisment

தலைமை நீதிபதி அமர்வு, "ஆக்ஸிஜன் இன்றி மக்கள் இறந்துகொண்டிருக்கும் சூழலில், ஆலையைத் திறக்கக்கூடாது என தமிழக அரசு கூறுவது சரியா? சட்டம் - ஒழுங்கை காரணம் காட்டி ஸ்டெர்லைட்டை திறக்க முடியாது என சொல்லக் கூடாது. எந்த நிறுவனம் என்பது முக்கியமல்ல; மக்களின் உயிர்தான் முக்கியம்" என்று கூறி, தமிழக அரசு விளக்கமளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் ஏப்ரல் 26ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.