Skip to main content

“நிதி வேண்டாம்! நீதிதான் வேண்டும்” - மாணவியின் தாய் வேதனை

Published on 23/12/2021 | Edited on 23/12/2021

 

“We Do not fund! We need Justice” The mother of the student

 

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பாச்சலூர் மலைக் கிராமத்தில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்துவந்த ஒன்பது வயது மாணவி, கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு பள்ளியின் பின்புறத்தில் உடல் எரிந்த நிலையில் இறந்துகிடந்தார்.

 

இது சம்பந்தமாக மாணவியின் பெற்றோர் போலீசாரிடம் புகார் கொடுத்ததைத் தொடர்ந்து, பள்ளியில் பணிபுரிந்துவந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், பொதுமக்கள் என பல பேரிடம் போலீசார் தீவிர விசாரணை செய்தும் உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், மாணவி மரணத்திற்குக் காரணமான குற்றவாளிகளை உடனடியாக போலீசார் கண்டுபிடிக்க வேண்டும் எனக் கோரி மேல்மலை, கீழ்மலைப் பகுதியில் உள்ள பொதுமக்களும் மாணவிக்கு ஆதரவாகப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். 

 

திண்டுக்கலில் நேற்று (22.12.2021) வெள்ளாளர் சங்கம் சார்பாக மாநிலத் தலைவர் ஹரிகரன் மற்றும் மாநில மகளிரணித் தலைவி அன்னலட்சுமி உட்பட மாநில பொறுப்பாளர்களும் மக்களும் பெருந்திரளாக கலந்துகொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவியின் பெற்றோரும் உறவினர்களும் கலந்துகொண்டு குற்றவாளியைக் கைது செய்யக் கோரி கண்டன குரல் எழுப்பினார்கள்.

 

அதன்பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய மாநிலத் தலைவர் ஹரிகரன், “ஒன்பது வயதான மாணவி, சிறுமியை எரித்து கொடூரமாக கொலை செய்து எட்டு நாட்கள் ஆகிறது. அப்படியிருந்தும் குற்றவாளிகளைப் பிடிக்க போலீசார் ஆர்வம் காட்டவில்லை. அதனால்தான் ஆர்ப்பாட்டம் நடத்தினோம் முதலில் மறியலுக்கு அனுமதி கேட்டோம். அதற்குப் போலீசார் அனுமதி தர மறுத்ததால், ஆர்ப்பாட்டம் செய்த பின் மறியலில் ஈடுபட்ட எங்களைப் போலீசார் வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்றனர். அதை வன்மையாகக் கண்டிக்கிறோம். ஒரு பச்ச மண்ணை எரித்துக் கொலை செய்த குற்றவாளிகளைப் பிடிக்க ஆர்வம் காட்டாத போலீசார், அதற்கு நீதி கேட்டுப் போராடிய எங்களைத் தடுப்பது எந்த விதத்தில் நியாயம். அதுவும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில்தான் மறியலில் ஈடுபட்டோம். இந்த நிலை தொடர்ந்தால் மாநில அளவில் போராட்டம் நடைபெறும்” என்று கூறினார்.

 

இந்தப் பேட்டியின்போது மாணவியின் தந்தை மற்றும் தாய் உடனிருந்தனர். அப்போது தாய், பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, “என் மகளைக் கொலை செய்த குற்றவாளியைப் போலீசார் பிடித்து தூக்கில் போட வேண்டும். அப்படிப் போட்டால்தான் என் மகளின் ஆத்மா சாந்தி அடையும். அதுபோல் எங்களுக்குத் தமிழ்நாடு அரசு நிதி எல்லாம் வழங்க வேண்டாம்; நீதி கிடைக்க வழி செய்ய வேண்டும்” என்று கூறினார். இந்நிலையில், தமிழ்நாடு டி.ஜி.பி. சைலேந்திரபாபு மாணவியின் மரண வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்