Advertisment

"எடப்பாடி சொல்வதை நம்ப முடியாது, எழுதித் தர வேண்டும்’’ - ராமதாஸ்

rs

ஸ்டெர்லைட் ஆலையை மூடப்போவதாகக் கூறும் எடப்பாடி பழனிச்சாமி அரசு, அதற்கான எழுத்துப்பூர்வ உத்தரவாதத்தை மக்களுக்கு அளித்தால் மட்டுமே அதை ஏற்றுக் கொள்ள முடியும் என்று தனது கருத்தை பகிர்ந்துள்ளார் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்.

Advertisment

இது குறித்த அவரது அறிக்கை: ’’தூத்துக்குடியில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. 13 அப்பாவி மக்களின் உயிர்களை பலி கொண்ட பிறகு தான் இப்படி ஒரு முடிவுக்கு அரசு வந்திருக்கிறது. தமிழக அரசின் அறிவிப்பு மேலோட்டமாகப் பார்க்கும் போது திருப்தியளித்தாலும், நம்பிக்கையளிப்பதாக இல்லை. இது போராடும் மக்களை எந்த வகையிலும் சமாதானப்படுத்தாது.

Advertisment

சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி,‘‘தூத்துக்குடி மக்களின் உணர்வுகளை மதித்து ஸ்டெர்லைட் ஆலையை மூட பணிகளை மேற்கொண்டு வருகிறது’’ என்று கூறினார். அதைத் தொடர்ந்து தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி,‘‘ஸ்டெர்லைட் ஆலையை இயக்குவதற்கு இனி எந்த காலத்திலும் அனுமதி அளிக்கப் படாது. இதை ஏற்று பொதுமக்கள் தங்களின் போராட்டத்தை கைவிட்டு அமைதி திரும்ப ஒத்துழைக்க வேண்டும்’’ என்று கூறியிருக்கிறார். தமிழக அரசின் கடந்த கால செயல்பாடுகளையும், ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின் போது பினாமி ஆட்சியாளர்கள் கட்டவிழ்த்துவிட்ட அடக்குமுறைகளையும் வைத்துப் பார்க்கும் போது ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் என்ற வாக்குறுதியை அரசு நிறைவேற்றும் என்று தோன்றவில்லை. அதனால் தான் போராட்டத்தைக் கைவிடுவதாக பொதுமக்கள் அறிவிக்கவில்லை.

ஒருபுறம் ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மூடும் திட்டம் தங்களிடம் இல்லை என்று ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் அறிவித்துள்ளது. ‘‘ நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை பராமரிப்பு பணிகளுக்கு 45 நாட்களுக்கு ஆலை மூடப்படும். இப்போது சற்று கூடுதலாக மூடப்பட்டுள்ளது. ஆலையை இயக்குவதற்கான உரிமத்தை தமிழக அரசு புதுப்பிக்கவில்லை. அதை எதிர்த்து தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடந்துள்ளோம். அந்த வழக்கு ஜூன் மாதம் 6&ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. அதில் நல்ல தீர்ப்பை வாங்கி ஆலையை திறப்போம்’’ என்று ஸ்டெர்லைட் ஆலையின் முதன்மை செயல் அதிகாரி ராம்நாத் அறிவித்திருக்கிறார். கடந்த காலங்களிலும் ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது. அப்போதெல்லாம் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் அதன் பண பலத்தை பயன்படுத்தி ஆலையை ஒரு சில வாரங்களில் திறந்திருக்கிறது. இத்தகைய கடந்தகால வரலாறுகளை அறிந்த எவரும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் என்ற முதலமைச்சர் பழனிச்சாமியின் வாய்வழி அறிவிப்பை நம்ப மாட்டார்கள்.

அதுமட்டுமின்றி, இந்தியாவில் அரசின் கொள்கைகளையும், செயல்பாடுகளையும் பெரு நிறுவனங்கள் தான் தீர்மானிக்கின்றன. அவ்வாறு இருக்கும் போது ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான எந்தவொரு கொள்கை முடிவையும் மத்திய அரசு அனுமதிக்காது. இந்தியாவின் நீதித்துறை கூட பெருநிறுவனங்கள் மீது பாசத்துடன் தான் நடந்து கொள்ளும். அதனால் தான் 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழலுக்கும், மனித உயிர்களுக்கும் ஏராளமான பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பதை ஒப்புக்கொண்ட பிறகும், ஆலையை மூடாமல் ரூ.100 கோடி அபராதம் செலுத்தி விட்டு ஆலையை தொடர்ந்து இயக்க அனுமதி அளித்தது. அதனால் ஏற்பட்ட துணிச்சல் காரணமாகவே ஸ்டெர்லைட் ஆலையை மூட மாட்டோம் என்று ஆலை நிர்வாகம் கூறுகிறது. ஆலையை மூட வேண்டும் என்று மாநில அரசு நினைத்தால் கூட, அதை மத்திய அரசு விரும்பாது. அத்தகைய தருணங்களில் மத்திய அரசு அளிக்கும் அழுத்தத்தை தாங்கும் திறன் எடப்பாடி அரசுக்கு இல்லை. இப்போது ஆலையை மூடப்போவதாகக் கூறும் பினாமி அரசு, மத்திய அரசு கொடுக்கும் அழுத்தத்துக்கு பணிந்து ஆலைக்கு அனுமதி அளிக்கத் தயங்காது. மேற்கண்ட நிகழ்வுகள் எல்லாம் நடக்காது என எடப்பாடி பழனிச்சாமி அரசு உத்தரவாதம் அளிக்குமா?

ஸ்டெர்லைட் ஆலையை மூடும் முடிவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருந்தால் அவர் முதலில் தூத்துக்குடி மாவட்ட மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும். அதிலும் குறிப்பாக, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த அவரது கருத்துக்கள் தூத்துக்குடி மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளன. தூத்துக்குடியில் நிலவும் பதற்றத்தைப் போக்குவதற்காக அவர் தூத்துக்குடிக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்திருக்க வேண்டும். அதை அவர் செய்யவில்லை. இதைக்கூட செய்யாத எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை எடுப்பேன் என்று கூறுவதை பொதுமக்கள் நயவஞ்சகமான ஒன்றாகவே பார்ப்பார்கள்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடப்போவதாகக் கூறும் எடப்பாடி பழனிச்சாமி அரசு, அதற்கான எழுத்துப்பூர்வ உத்தரவாதத்தை மக்களுக்கு அளித்தால் மட்டுமே அதை ஏற்றுக் கொள்ள முடியும். பினாமி பழனிச்சாமி உடனடியாக தூத்துக்குடி சென்று பாதிக்கப்பட்ட மக்களையும், போராட்டக் குழுவினரையும் சந்தித்து பேச வேண்டும். அப்போது ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான ஒப்பந்தம் முதலமைச்சர் பழனிச்சாமி முன்னிலையில் தமிழக அரசுக்கும், போராட்டக்குழுவினருக்கும் இடையே கையெழுத்திடப்பட வேண்டும். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண இது ஒன்று தான் வழியாகும்.’’

edapadi palanisamy Sterlite ramadas
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe