ADVERTISEMENT

“காவிரி நீரைப் பெற அனைத்து வழிகளிலும் முயற்சித்து வருகிறோம்” - அமைச்சர் துரைமுருகன்

12:46 PM Sep 13, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் 86 வது கூட்டம் டெல்லியில் நேற்று (12.09.2023) நடைபெற்றது. அப்போது காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு தலைவர், வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் எனக் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு பரிந்துரைத்திருந்தார்.

இதையடுத்து கர்நாடக அரசு சார்பில் சிறப்பு அவசர கூட்டம் இன்று நடைபெற உள்ளது. கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் விதான் சவுதாவில் இன்று மதியம் இந்த கூட்டம் நடைபெறுகிறது. மேலும் அனைத்துக் கட்சிகளும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள அம்மாநில அரசு அழைப்பு விடுத்துள்ளது. காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்த அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி இந்த கூட்டத்தில் விவாதிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் துணை முதல்வர் டி.கே.சிவகுமார், மூத்த அமைச்சர்கள், முன்னாள் முதல்வர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ள உள்ளனர்.

இந்நிலையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது இதுகுறித்து அவர் பேசுகையில், “காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு பிறப்பித்துள்ள உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை கர்நாடக அரசு சார்பில் வைத்துள்ளனர். தமிழக அரசு சார்பில் மறுபரிசீலனை இன்றி காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு நீரை திறந்துவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். இது குறித்து காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு தான் முடிவெடுக்க வேண்டும்.

கர்நாடக அரசு முதலில் காவிரி நடுவர் மன்றம் அமைப்பதை ஏற்கவில்லை. பின்னர் உச்சநீதிமன்றம் சென்று ஏற்றுக் கொள்ள வைத்தோம். காவிரி நதி நீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால தீர்ப்பு கேட்டோம். அதனை கர்நாடக அரசு கொடுக்கக் கூடாது என்று சொன்னார்கள். அதன் பின்னர் இடைக்கால தீர்ப்பை வாங்கினோம். காவிரி நதி நீர் விவகாரத்தில் ஒரு இஞ்ச் ஒவ்வொரு அங்குலமாக கர்நாடக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அதனை சந்தித்து தமிழ்நாட்டு மக்களுக்கு வேண்டிய உரிமைகளை பெற்று கொண்டு தான் வந்துள்ளோம். காவிரி நீரைப் பெற அனைத்து வழிகளிலும் முயற்சித்து வருகிறோம்” என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT