
கர்நாடகாவின் மேகதாது அணை கட்டும் முடிவை எதிர்த்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் உண்ணாவிரதம் போராட்டம் இன்று நடைபெற்றது. போராட்டத்தின் இறுதியில் செய்தியாளர்களை அண்ணாமலை பேசுகையில்,
''காவேரி பிரச்சனையில் நமது அப்பாவி தமிழர்களும் அப்பாவி விவசாயிகளும் குறிப்பாக பெங்களூரில் வசிக்கும் தமிழர்கள் தான் இதில் பலிகடாவாக மாறியிருக்கிறார்கள். அதனால்தான் இந்த பிரச்சனையை மிக நாகரீகமாக கொண்டுபோக அறப்போராட்டமாக உண்ணாவிரத போராட்டத்தை பாஜக கையில் எடுத்திருக்கிறது. காலை 9 மணியிலிருந்து அமைதியாக தஞ்சாவூரில் இந்த டெல்டா பகுதியில் அனைத்து தலைவர்களும் இருக்கையில் அமர்ந்து எங்களுடைய கருத்துக்களை பரிமாறிக் கொண்டு, இதன் மூலமாக எந்த ஒரு சாமானிய மக்களுக்கும் ஒரு பிரச்சினை வரக்கூடாது. பிரச்சினை இருப்பது அரசுக்கும் அரசுக்கும்தான். அங்கே இருக்கக் கூடிய கட்சிகளுக்கும் இங்கே இருக்கக்கூடிய கட்சிகளுக்கும்தான்.
அப்படிப்பட்ட முறையில்தான் போராட்டத்தை கையில் எடுத்து இருக்கிறோம். அதுமட்டுமல்ல, கோதாவரி காவிரி இணைப்பு வேகமாக செல்லவேண்டும். மத்திய அரசு 90 சதவீத நிதியை கொடுப்பதற்கு தயாராக இருக்கிறார்கள். காவிரி-குண்டாறு அணை கட்டும் திட்டத்தை விரைவில் முடிக்க வேண்டும். காவிரி ஆற்றில் நடக்கக்கூடிய மணல் கொள்ளையை நிறுத்த வேண்டும். நெல் கொள்முதல் மையங்களில் நடத்தப்படுகின்ற ஊழல் கட்டுக்குள் கொண்டு வரப்பட வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு கொடுக்கப்பட வேண்டிய மானியம் 1,400 ரூபாய் வரை விரைந்து தர வேண்டும். திமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பதை செய்ய வேண்டும். தமிழக மக்களின் நலனுக்காக 365 நாட்களும் போராட நாங்கள் தயார்'' என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.