Skip to main content

“ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் சேர்த்துதான் போராடுகிறோம்” - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

Published on 20/08/2023 | Edited on 20/08/2023

 

We are fighting for the whole of India  Minister Anbil Mahesh Poiyamozhi

 

நீட் தேர்வுக்கு எதிராக இன்று (ஆகஸ்ட் 20) உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளதாக திமுக சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த உண்ணாவிரத போராட்டமானது திமுக இளைஞர் அணி, மாணவர் அணி மற்றும் மருத்துவர் அணி சார்பில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மதுரை மாவட்டம் நீங்கலாகத் தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் இந்த உண்ணாவிரத ஆர்ப்பாட்டம் இன்று காலை 9 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

 

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நடைபெற்று வரும் இந்த உண்ணாவிரத போராட்டத்தை அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் தொடங்கி வைத்தார். மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். இதே போன்று அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் அமைச்சர்கள், திமுக மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

 

அந்த வகையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட திமுக சார்பாக‘நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கும் மத்திய அரசையும், ஆளுநரையும் கண்டித்து உண்ணாவிரத போராட்டத்தைத் தஞ்சை மத்திய தபால் நிலையம் அருகில் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், “ஆளுநருக்கு சட்டமன்றத்தில் இருந்து தீர்மானம் செல்கிறது என்றால் அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பதுதான் அவரின் பணி. நீட் தேர்வை எதிர்த்து நாம் போராடுகிறோம் என்றால் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் சேர்த்துதான் போராடுகிறோம். பொதுநலம் சார்ந்து இந்த அறப்போராட்டத்தை நாம் முன்னெடுத்துள்ளோம். மத்திய அரசாங்கத்தோடு இணக்கமாக இருந்தாலும் நீட் தேர்வு எதிர்ப்பு போன்ற பொதுநலத்திற்காக ஒரே ஒருமுறையேனும் மத்திய அரசாங்கத்தை மாணவர்களின் பக்கம் நின்று கேள்வி கேளுங்கள்” என தெரிவித்தார்.

 

We are fighting for the whole of India  Minister Anbil Mahesh Poiyamozhi

 

இந்நிகழ்வில் திமுக உயர்நிலை செயல்திட்டகுழு உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், திமுக மாவட்ட செயலாளர்கள் துரை.சந்திரசேகரன், அண்ணாதுரை  மாநகர செயலாளர், மேயர் சண்.இராமநாதன், துணை மேயர் திருமதி.அஞ்சுகம் பூபதி ஆகியோரும் அணி அமைப்பாளர்களும் கலந்துகொண்டார்கள். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்! 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Govt Bus Driver Conductor incident information released in the investigation

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பழைய பாலக்கரை பகுதியில் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு நகரப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது 8 பேர் கொண்ட இளைஞர் கும்பல் ஒன்று இந்த பேருந்தை வழிமறித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுட்டனர். மேலும் ஆத்திரமடைந்த இளைஞர்கள் பேருந்துக்குள் சென்று ஓட்டுநரை தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஓட்டுநரை பேருந்துக்கு வெளியே இழுத்து வந்து அவரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதனை தடுக்க முயன்ற நடத்துநர் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அருகில் இருந்தவர்கள் இதனை தடுக்க முயன்ற போது இந்த இளைஞர்கள் அவர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து தாக்கியுள்ளனர். அதே சமயம் அந்த வழியே வந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் இருவர் இந்த சம்பவத்தை படம் எடுத்தபோது அவர்களையும் தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் இருவர் என 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 6 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேரும் கஞ்சா போதையில் இருந்தனர் என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.  இத்தகைய சூழலில் மேலும் 4 பேரை  போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Next Story

“எல்லோருக்கும் எல்லாம் அதுதான் திராவிட மாடல் அரசு” - அமைச்சர் அன்பில் மகேஷ் பிரச்சாரம்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Minister Anbil Mahesh campaigned Everything for everyone is the Dravidian model govt

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து  திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருவெறும்பூர் பகுதி கழகத்திற்கு உட்பட்ட 39, 40, 41, 42 ஆகிய வார்டு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

அப்பொழுது திருவெறும்பூர் பகுதி கழகத்தின் சார்பில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் வேட்பாளர் துரை வைகோ ஆகியோருக்கு  சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பொதுமக்கள் மத்தியில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:- எல்லோருக்கும் எல்லாம் என்று அமையப்பெற்றது தான் நமது திராவிட மாடல் ஆட்சி. இந்த திராவிடமாடல் ஆட்சியில் தமிழக மக்களின் நலனுக்காகவே அரும்பாடு பட்டு ஆட்சி செய்து கொண்டிருப்பவர் நமது தமிழக முதல்வர். இந்தியா கூட்டணி வெற்றிபெறும் பொழுது ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிய சிலிண்டர் 500 ரூபாய்க்கு வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்க சாவடிகள் முழுவதும் அகற்றப்படும். தற்போது மார்ச் மாதம் வரை மாணவர்கள் வாங்கியுள்ள கல்விக் கடன் முற்றிலும் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக முதல்வர் கூறியுள்ளார். பெண்கள் தான் நாட்டின் கண்கள் என தமிழக முதல்வர் அடிக்கடி கூறி வருகிறார். ஒரு நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்கு வகிக்க கூடியவர்கள் பெண்கள் தான் . ராகுல் காந்தியும் நமது தமிழக முதல்வரும் அண்ணன் தம்பியாய் இருந்து வருகின்றனர். எனவே மத்தியில் இந்தியா கூட்டணியான ஆட்சி அமைந்தால்தான் நமக்கு உண்டான அனைத்து கோரிக்கைகளையும் நாம் நிறைவேற்றிக் கொள்ள முடியும். நமக்குத் தேவையான நிதியைப் பெற்று தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை அமைத்து நிறைவேற்ற முடியும்.

இன்றைக்கு பெட்ரோல் டீசல் மற்றும் விலைவாசி உயர்வுக்கு முக்கிய பங்கு வகிக்கக்கூடிய பாசிச பாஜக ஆட்சியை முற்றிலுமாக அகற்ற வேண்டும். தமிழக முதல்வர் கூறியது போல் மத்தியில் யார் வரவேண்டும் என்பதை காட்டிலும் மத்தியில் யார் வரக்கூடாது என்பதற்கான தேர்தல் தான் இந்தத் தேர்தல். அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளான, சமத்துவநாளில் அவர் எழுதிய அரசியல் சாசனத்தை பாதுகாக்க வேண்டும் என்றால், மோடியை மக்கள் அனைவரும் தூக்கி எறிய வேண்டிய தேர்தல் தான் இது.  எனவே மத்தியில் ராகுல் காந்தி தலைமையிலான இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்து நாம் வாங்கும் 500 ரூபாய் சிலிண்டரை அடுப்பில் பற்ற வைக்க வேண்டும் என்றால் அதற்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என பொதுமக்களாகிய உங்களிடம் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

பிரச்சாரக் கூட்டத்தில் மாநகரச் செயலாளரும், மண்டல தலைவருமான மதிவாணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சேகரன், திருவெறும்பூர் பகுதி செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான சிவகுமார், 41 வது வட்ட செயலாளர் அப்பு என்கின்ற கருணாநிதி, 42 வட்டச் செயலாளர் புண்ணியமூர்த்தி தேர்தல் பொறுப்பாளர்களான மறைமலை, தனசேகர் மதிமுக துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா, மதிமுக மாவட்ட செயலாளர்கள் வெல்ல மண்டி சோமு, தமிழ் மாணிக்கம் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்