publive-image

Advertisment

சென்னை குரோம்பேட்டையை அடுத்த குறிஞ்சி நகர்ப் பகுதியைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் (19). கடந்த 2021 ஆம் ஆண்டு சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தின் மூலம் 12 ஆம் வகுப்பு முடித்த இவர், 'ஏ' கிரேட் கேட்டகிரியில் தேர்ச்சி பெற்றார். இரண்டுமுறை நீட் தேர்வு எழுதியும் தோற்றதால் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். மாணவன் ஜெகதீஸ்வரன் இறந்த சோகத்தில், அவரின் தந்தை செல்வசேகரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ''நேற்று முன்தினம் ஜெகதீஸ்வரன் என்ற மாணவன் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முயற்சி செய்து தோல்வியடைந்ததால் தன்னுடைய மருத்துவக் கனவு பறிபோய் விட்டதால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இன்று அதிகாலை அவருடைய தந்தையும் தற்கொலை செய்துகொண்டுள்ளார். நீட் தேர்வால் மாணவர்களை தான் பறிகொடுத்துக் கொண்டிருந்தோம். இப்பொழுது மாணவர்களுடைய குடும்பங்களையும் பறிகொடுத்திருக்கிறோம். அவருடைய குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு ஆறுதல் சொல்லும் அளவிற்கு எனக்கும் தெம்பில்லை. எத்தனையோ இழப்புகள் வருடா வருடம் நீட் தேர்வால் மாணவர்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து அரசியல் பேச விரும்பவில்லை. இருந்தாலும் ஒன்றிய அரசு தயவு செய்து தமிழ்நாட்டு மாணவர்களுடைய பெற்றோர்களுடைய மனநிலையைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இரண்டு முறை சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி இருக்கிறோம். ஒருமுறை ஆளுநர் திருப்பி அனுப்பி விட்டார். இன்னொரு முறை அதை டெல்லிக்கு அனுப்பாமல் வைத்திருந்தார். தமிழகமுதல்வர் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக வேறு வழியில்லாமல் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்திருக்கிறார். விரைவில் ஒரு முடிவு எடுக்க வேண்டும். இறந்த மாணவனின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன். மாணவர்கள் தவறான முடிவை எடுக்காதீர்கள். விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று சொல்லி இருக்கிறார்கள். எனவே மீண்டும் பாஜக அரசிடம் கேட்டுக் கொள்வது இந்த நீட் தேர்வுக்கு தயவு செய்து தமிழ்நாட்டிலிருந்து விலக்கு கொடுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.

Advertisment

அப்பொழுது செய்தியாளர்கள் 'இந்த ஆண்டுதான் உயிரிழப்புகள் எதுவும் இல்லை என ஆளுநர் பேசியநாளிலேயே மாணவர் இறந்துள்ளாரே' என்ற கேள்விக்கு, ''அவர் பேசின அன்றே ஒரு மாணவனை பலி கொடுத்திருக்கிறோம். அவர் பேசும்போதே நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவருடைய பெற்றோர் ஆளுநரிடம் நேரில் நீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள் என்றால் நம்மளுடைய ஆளுநர் புரிந்து கொள்ள வேண்டும். அவர் வேறொரு உலகத்தில் இருக்கிறார். தமிழ்நாட்டு மக்களின் மனநிலையை ஆளுநர் சுத்தமாக புரிந்து கொள்ளவே இல்லை. தொடர்ந்து கிட்டத்தட்ட 20 உயிர்களை நாம் பலி கொடுத்திருக்கிறோம்'' என்றார்.