ADVERTISEMENT

நாங்களும் மனுசங்க தானே...! எங்களுக்கு கரோனா டெஸ்ட் எப்போ எடுப்பீங்க!

06:04 PM Jul 10, 2020 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகம் முழுவதும் கரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில், தூய்மைப்பணியாளர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வழுத்துள்ளது.

இது குறித்து ஆதித்தமிழர் தூய்மைத் தொழிலாளர் பேரவையின் மாநில துணைச்செயலாளர் சோழன் பேசுகையில், “தமிழகத்தில் எந்த ஒரு பேரிடர் காலம் வந்தாலும் மீட்பு குழுவினருக்கு இணையாக தூய்மைபணியாளர்களும் களத்தில் நின்று வேலை செய்கிறோம். சுனாமி, புயல், பெரும்மழையினால் ஏற்படும் சீற்றம் உள்ளிட்ட காலங்களில், மக்களுக்கு அரணாக இருந்து செயலாற்றி வருகிறோம். சுனாமி காலத்தில் இறந்தவர்களின் சடலத்தை எடுக்க இராணுவமே தயங்கியது. அப்போது, சென்னையில் இருக்கும் தூய்மைப் பணியாளர்கள் சடலங்களைக்கூட அப்புறப்படுத்தினர். அதற்காக சட்டமன்றத்திலேயே எங்களை அனைத்து கட்சியினரும் பாராட்டினார்கள். ஆனால், தற்போது உள்ள இந்த கரோனா சூழ்நிலை என்பது அனைத்து பேரிடர்களைக்காட்டிலும் மோசமான ஒன்று.

உலகப்பேரிடரான இந்த கரோனா காலத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவலளர்கள் உள்ளிட்டோர் முதன்மைப் பணியாளர்கள் ஆவர். எங்களின் உயிரைப் பணையம் வைத்து தொடர்ந்து ஒய்வின்றி உழைத்து வருகிறோம். மாறாக அரசிடம் இருந்து கிடைக்கவேண்டிய அடிப்படை பாதுகாப்பு உபகரணங்கள்கூட எங்களுக்கு முழுமையாக கிடைப்பது இல்லை என்பதுதான் இங்கு வேதனையான விஷயம். அப்படி கிடைத்தாலும், 6 மணிநேரம் பயன்படுத்தக்கூடிய முகக்கவசம், கையுறைகள் உள்ளிட்டவைகளை இரண்டு நாட்கள் பயன்படுத்தவேண்டிய சூழ்நிலையே நிலவுகிறது.


இது ஒரு புறம் இருக்க, நாளுக்கு நாள் கரோனாவின் தீவிரத்தன்மை அதிகரித்த வண்ணமே உள்ளது. அதிலும் அச்சுறுத்தும் விதமாக முதன்மைப் பணியாளர்களாக இருப்பவர்களுக்கு எளிதில் நோய் தொற்றிவிடுகிறது, பலர் இறந்தும் வருகின்றனர். தமிழகத்தில் முதன்முதலாக சென்னையில்தான் தூய்மைப்பணியாளர்களுக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், அங்கேதான் இறப்பு சம்பவமும் நடைபெற்றது. எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து தூய்மைப் பணியாளர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அதுவும், 15 நாட்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் தொடர்ந்து நடைபெற வேண்டும் என அரசு கூறியது.

ஆனால், நாகர்கோவில், பல்லடம், ராசிபுரம் உள்ளிட்ட சில இடங்களைத்தவிர, எந்த பகுதியிலும் முறையான பரிசோதனை நடத்தப்படவில்லை. தமிழகம் முழுவதும் மாநராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள், கிராம பஞ்சாயத்துகள், பிரதமரின் சிறப்பு திட்டமான தூய்மை இந்தியா திட்டம் உள்ளிட்டவைகளின் கீழ் நிரந்தரம், ஒப்பந்த அடிப்படையில் மொத்தம் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்களை நேரடியாக களத்தில் சென்று சந்திக்கின்றனர். ஒவ்வொரு நாளும் பயத்துடனேயே, எதிர்கொள்ளவேண்டிய சூழ்நிலையில் பணியாற்றுகிறோம். தற்போது, தமிழகத்தில் உள்ள காவல் துறையினருக்கு எடுக்கப்பட்ட கரோனா பரிசோதனையில், பலருக்கு கரோனா இருப்பது உறுதியானது. அதில், பல இறப்புகளும் நிகழ்ந்தன. மக்களுடன் குறைந்த அளவு தொடர்பு கொண்டவர்களுக்கே இந்த சூழ்நிலை இருக்கும் பட்சத்தில் தூய்மைப் பணியாளர்களின் நிலை என்ன, கரோனா பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிப்பது மட்டுமே அரசு செய்கிறது. ஆனால், அந்த பகுதியில் கட்டை கட்டுதல், கிருமிநாசினி தெளித்தல், மக்கள் அனைவருக்கும் கபசுரக்குடிநீர் வழங்குதல், அதுமட்டுமின்றி தொடர்ந்து அந்த பகுதிக்கு சென்று குப்பைகளை பெறுதல் ஆகிய பணிகள் இருக்கும் நிலையில், எப்படி கரோனா எங்களுக்கு நோய் தொற்றாமல் இருக்கும்.

கரோனாவுக்கு பிறகு ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியத்தில் பணியாற்றி பழனி என்பவர் தூய்மைப் பணியில் இருக்கும்போதே திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார். அங்கிருந்த அதிகாரிகள், உடனே குப்பை வண்டியில் அவரை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர். ஆனால், அவர் இறந்ததுவிட்டார் என்பதால், அவரை போஸ்மார்டம் செய்யாமல், கரோனா டெஸ்டும் எடுக்காமல் அப்படியே குடும்பத்தினரிடம் கொடுத்து அடக்கம் செய்ய சொல்லிவிட்டனர்.

அந்த அளவிற்கு எங்களுக்கு எங்களின் மீது தீண்டாமை எண்ணம் உள்ளது அரசுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் கொண்டுள்ளனர். நாங்கள் ஒன்றும் எங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற சுயநலத்தில் மட்டும் டெஸ்ட் எடுக்கச்சொல்லவில்லை. ஒவ்வொரு வார்டாக சென்று மக்களை பார்க்கிறோம். அதோபோல், ஒவ்வொரு மாவட்டத்திலும் தூய்மைப் பணியாளர்கள் என்பவர்கள் கூட்டம், கூட்டமாக ஒரு குறிப்பிட்ட பகுதியில் நெருக்கமான முறையிலோ அல்லது அடுக்குமாடி கூடியிருப்பிலோதான் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறோம். அப்படி இருக்கும் பட்சத்தில் எங்களுக்கு கரோனா இருந்தால் எங்கள் மூலமாக பரவும் விகிதம் அதிகம் ஆகும். எனவே, முதலில் எங்களுக்குத்தான் கரோனா பரிசோதனைகள் செய்து தனிமைப்படுத்தி வைக்கவேண்டும்.


அதைவிடுத்து, கரோனா அறிகுறி இருந்தால் மட்டுமே டெஸ்ட், மற்றபடி சத்து மாத்திரை, இரத்த பரிசோதனை, தெர்மல் டெஸ்ட், தினமும் கபசுரக்குடிநீர் என வழங்கி கரோனா வராது என அதிகாரிகள் சொல்கிறாகர்கள், எங்கள் பணியாளர்களும் விழிப்புணர்வே இல்லாமல் நமக்கெல்லாம் கரோனா வராது என தொடர்ந்து பணி செய்து வருகின்றனர். தமிழகத்தில் மட்டும் இதுவரை சென்னை, மதுரை, சேலம், ஈரோடு என 11 தூய்மைப் பணியாளர்கள் கரோனாவால் இறந்துள்ளனர்.

அறிகுறி வந்ததற்கு பிறகு பலருக்கு பரிசோதனை செய்யப்பட்டு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. திருச்சியில்கூட அரசு மருத்துவமனையில் பணியாற்றிய தூய்மைப் பணியாளர் ஒருவருக்கு கரோனா கண்டறியப்பட்டு, தற்போது அவரின் குடும்பத்தில் உள்ளோருக்கும் இருப்பதும் கண்டறியப்பட்டது. திருச்சியில் மட்டும் 1500க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் உள்ளனர்.

தற்போது இந்த விஷயம் அவர்களுக்கு மத்தியில் ஒரு கலகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூய்மைப்பணியாளர்கள் எல்லோருக்கும் டெஸ்ட் எடுத்து கரோனா இருப்பது உறுதியாகிவிட்டால், பயத்தில் யாரும் வேலைக்கு வரமாட்டார்கள் எனவேதான் அரசு கரோனா டெஸ்ட் எடுக்க மறுக்கிறது. அதேபோல், களத்தில் பணியாற்றி இறந்துபோகும் தூய்மைப் பணியாளர்களுக்கு மத்திய அரசு அறிவித்தது போன்று ரூ.50லட்சம் இழப்பீடும் வழங்கப்படாமல் உள்ளது.


எனவே, உயிரை பணையம் வைத்து வேலை செய்யும் தூய்மைப்பணியாளர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்கவேண்டும், பணியில் இருக்கும்போது கரோனாவால் இறந்தவரின் வீட்டிற்கு ஒரு அரசு வேலை வழங்கவேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரமாக பணியமர்த்தவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வழியுறுத்தி தொடர்ந்து எங்கள் சங்கம் உள்ள 15 மாவட்டங்களிலும் போராட்டம் நடத்தி வருகிறோம்.

பொதுவாகவே, தூய்மைப்பணியாளர்களாக இருப்பவர்கள் 60 சதவீதத்தினர் தோல்நோய், சுவாச பிரச்சனை உள்ளிட்ட நோய்களுக்கு உட்பட்டு 50 வயதிலேயே மரணம் அடைந்து விடுகின்றனர். இப்படி இருக்கும் பட்சத்தில், இந்த கரோனா காலத்தில் அரசும் எங்களை வஞ்சிப்பது பெரும் கொடுமையாக உள்ளது. நாங்களும் மனுசங்கதானே எப்ப எங்களுக்கு கரோனா டெஸ்ட் எடுப்பாங்க சார்…” என்றார் வேதனையுடன்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT