அண்மையில் பிரதமர் மோடி குறித்த புத்தகத்தில் அம்பேத்கரையும் பிரதமர் மோடியையும் ஒற்றுமைப்படுத்தி இசையமைப்பாளர் இளையராஜா எழுதிய முன்னுரை பல்வேறு விமர்சனங்களை பெற்றிருந்தது. பல்வேறு தரப்பிலிருந்து இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு எதிர்ப்புகளும், ஆதரவுகளும்குவிந்தன. இந்நிலையில் இளையராஜா மீதுவிமர்சனத்தை முன்வைத்துள்ள விதம்குறித்துகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு திரைப்பட இயக்குநர் ப.ரஞ்சித் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் நடந்த விழா ஒன்றில் பேசிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், 'உணவுக்கு வழியில்லாமல் இருந்த நிலையில் கம்யூனிஸம் பேசிவிட்டு பணமும் புகழும் வந்தவுடன் தங்களை உயர்ந்த ஜாதி என நினைத்துக் கொள்கிறீர்களே...' என விமர்சித்து பேசியிருந்தார். இந்நிலையில் அவரின் பேச்சுக்கு இயக்குநர் ப.ரஞ்சித் அவரது டிவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், 'பணமும் புகழும் வந்த உடன் தங்களை உயர்ந்த ஜாதி என நினைத்துக் கொள்கிறார்களே' என ஈவிகேஎஸ் இளங்கோவன் விமர்சிப்பதும் அதற்கு கி. வீரமணி கைதட்டுவதும் இதுதான் இளையராஜாவை விமர்சிக்கின்ற முறையா..? இந்த சாதிய மனநிலை அதுவும் பெரியார் மேடையில் நிகழ்ந்தது பெரிதும் கண்டிக்கத்தக்கது' என தெரிவித்துள்ளார்.