Skip to main content

வெலிங்டன் நீர்த் தேக்கத்திலிருந்து தண்ணீர் திறப்பு! 24 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு நீர் பாசனம்! 

Published on 12/01/2021 | Edited on 12/01/2021

 

Water opening from Wellington river

 

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்துள்ள வெலிங்டன் நீர்த் தேக்கத்தில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.

 

இந்த நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சாகமூரி தலைமை தாங்கினார். அமைச்சர் எம்.சி.சம்பத், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் இருந்து, மலர் தூவி தண்ணீரை திறந்து வைத்தார். 

 

பின்னர் செய்தியாளர்களைச் சந்ததித்த அவர், “கடலூர் மாவட்டம், திட்டக்குடி வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் இருந்து பாசனத்திற்குத் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள், தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தனர். அதன்படி தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தலின் பேரில் 110 நாட்களுக்கு இந்தப் பகுதி விவசாயிகளின் பாசனத்திற்குத் தண்ணீர் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. 
 

வெலிங்டன் நீர்த் தேக்கத்தில் இருந்து வினாடிக்கு 130 கன அடி வீதம் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் திட்டக்குடி மற்றும் விருத்தாசலம் வட்டங்களில் உள்ள 23 ஏரிகள் மற்றும் 63 கிராமங்களில் கீழ் மட்ட கால்வாய் மூலம் 9,209 ஏக்கர் நிலமும், மேல்மட்ட கால்வாய் மூலம் 14,850 ஏக்கர் நிலமும் ஆக மொத்தம் 24 ஆயிரத்து 59 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகின்றன. 
 

மேலும், நீர்த்தேக்கத்தின் மொத்த நீர்மட்ட உயரம் 29.72 அடி ஆகும். இதில் தற்சமயம் 26.80 அடி தண்ணீர் உள்ளது. நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவான 2,580 மில்லியன் கன அடியில் தற்சமயம் 1,860 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. இந்த நிலையில், இன்று முதல் 110 நாட்களுக்கு பாசனத்திற்காக தண்ணீர் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். ஆகையால் விவசாயப் பெருங்குடிகள் மற்றும் பொதுமக்கள் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றார். 

 

பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் ரவி மனோகரன், செயற்பொறியாளர் மணி மோகன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்