Skip to main content

10 ஆயிரம் கன அடியைத் தொட்ட நீர்வரத்து

Published on 27/07/2023 | Edited on 27/07/2023

 

NN

 

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணமாகக் கர்நாடக அணைகளிலிருந்து நீர் திறக்கப்பட்டு வருகிறது. குறிப்பாகக் குடகு மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாகக் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதன் காரணமாகக் கர்நாடகாவின் கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்தும், கபினி அணையிலிருந்தும் நீர் திறக்கப்பட்டுள்ளது.

 

தொடர் நீர்வரத்து காரணமாகக் கடந்த 25 ஆம் தேதி மாலையில் தமிழ்நாட்டின் எல்லையான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து 5,000 கன அடியாக உயர்ந்தது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது. காவிரி நீர் தமிழக எல்லையைக் கடந்ததால் பிலிகுண்டுலுவைச் சுற்றியுள்ள கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

 

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 10,323  கன அடியாக உயர்ந்துள்ளது. சனிக்கிழமை மேட்டூர் அணைக்கு 4 ஆயிரம் கன அடி நீர் வந்துசேர்ந்த நிலையில் படிப்படியாக நீர்வரத்து அதிகரித்து தற்போது நீர்வரத்து 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 12 கன அடி நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. அணையின் தற்போதைய நீர் இருப்பு 28.32 டிஎம்சியாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கர்நாடக அணைகளிலிருந்து தொடர்ந்து திறக்கப்பட்டால் மேட்டூருக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்