Skip to main content

உயிருக்குப் போராடிய குரங்கு; மனிதநேயத்துடன் காப்பாற்றிய வாட்ச்மேன்

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
watchman was humanity saved the monkey who was fighting for his life

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த டி வீரப்பள்ளி பகுதியில் தனியார் பள்ளிக்கு அருகாமையில் உள்ள டிரான்ஸ்பார்மரில் அவ்வழியாகச் சென்ற குரங்கு ஒன்று தாவி செல்லும் பொழுது மின்சாரம் தாக்கி சுயநினைவின்றி கீழே விழுந்தது.

அப்போது அந்தத் தனியார் பள்ளியில் வாட்ச்மேனாக பணிபுரியும் முருகன் என்பவர் உடனடியாக மின்சாரம் தாக்கி கீழே விழுந்த குரங்கின் அருகே ஓடிச்சென்று பார்த்தவர் அதற்கு உயிர் இருப்பதை அறிந்து ஓடிபோய் தான் பயன்படுத்தும் குடிநீர் பாட்டிலில் இருந்த தண்ணீரை ஊற்றி அதற்கு குளிப்பாட்டி ஒரு துணியால் அதைச் சுத்தம் செய்து கருணையுடனும் மனிதநேயத்துடனும் செயல்பட்டுள்ளார். பின்னர் அந்த குரங்கிற்கு மீண்டும் சுயநினைவை கொண்டு வந்தார்.

அதுமட்டுமின்றி அந்தக் குரங்கு மின்சாரம் தாக்கி கீழே விழுந்ததால் ஏற்பட்ட ரத்த காயங்களுக்கு மருத்துவ உதவி செய்ய வேண்டும் என்பதற்காக உடனடியாக அருகாமையில் இருந்த மருந்து கடையில் காயத்திற்கு போடும் மருந்து வாங்கி வந்து அதற்கு முதல் உதவி செய்தார்.

பின்பு பள்ளியில் விடுப்பு வாங்கிக்கொண்டு அடிப்பட்ட அந்தக் குரங்கை தூக்கிக்கொண்டு தியானம் பகுதியில் இயங்கும் அரசு கால்நடை மருத்துவமணைக்கு எடுத்துச் சென்று குரங்குக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றினார். இந்தச் சம்பவம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

கள்ளக்குறிச்சி பள்ளி எரிப்பு வழக்கு; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 03/07/2024 | Edited on 03/07/2024
Kallakurichi school incident case High Court action order

கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் - செல்வி தம்பதியரின் மகள் ஸ்ரீமதி. இவர் கள்ளக்குறிச்சி அருகே கனியாமூரிலுள்ள சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12ஆம் தேதி மர்மமான முறையில் மாடியில் இருந்து விழுந்து மரணம் அடைந்தார். இதற்கு நீதிகேட்டு பெரியளவில் போராட்டம் நடைபெற்றது. அது பள்ளிக்குள் கலவரமாக மாறியது. மாணவியின் மரணம் தொடர்பான வழக்கு ஸ்ரீமதி வழக்கு எனத் தமிழகத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதற்கிடையே பள்ளியின் தாளாளர் ரவிக்குமார் என்பவர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவில். “இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையில் கால தாமதம் ஏற்படுகிறது. மேலும் இந்த விசாரணை நேர்மையான முறையில் நடைபெறவில்லை. பள்ளியில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை மீட்கப்பட வேண்டும்” எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வில் இன்று (03.07.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி மாணவி மரணத்தை அடுத்து ஏற்பட்ட வன்முறை தொடர்பான வழக்கில் 4 மாதங்களில் விசாரணையை முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிடப்படுகிறது. இந்த 4 மாதக்காலத்திற்குள் சிபிசிஐடி போலீசார் விசாரணையை முடிக்காவிட்டால் மனுதாரர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடரலாம். பள்ளியில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை மீட்கவும் புலன் விசாரணை அதிகாரிக்கு உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்தார். 

Next Story

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு; குஜராத்தில் பள்ளி உரிமையாளர் கைது!

Published on 30/06/2024 | Edited on 30/06/2024
NEET exam question paper leak School owner arrested in Gujarat

இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. அதேநேரம் சிபிஐ போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். மேலும் என்.டி.ஏ. எனப்படும் தேசிய தேர்வு முகமையின் தலைவர் நீக்கப்பட்டு புதியதாக ஒருவரை நியமனம் செய்து மத்திய கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. மேலும் நீட் முறைகேடுகளைக் கண்டித்து பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நீட் முறைகேடு தொடர்ந்து எதிரொலித்து வரும் நிலையில் சிபிஐ விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது. மேலும் நீட் தேர்வு முறைகேடு புகார் தொடர்பாக இதுவரையில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கில் குஜராத் மாநிலம் கோத்ராவில் உள்ள ஜெய் ஜலராம் பள்ளியின் உரிமையாளர் தீக்சித் படேலை சிபிஐ கைது செய்துள்ளது. இவரது பள்ளியில் நீட் தேர்வு நடைபெற்ற நிலையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே ஜார்க்கண்டில்  உள்ள பள்ளி ஒன்றின் முதல்வர் அசானுல் ஹக், அப்பள்ளியின் துணை முதல்வர் இம்தியாஸ் ஆலம் ஆகியோரை சிபிஐ கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.