Skip to main content

பேரூராட்சி மன்றத் தலைவரின் கணவர் கொலை மிரட்டல்; புகார் கூறும் வார்டு உறுப்பினர்கள்

Published on 28/07/2022 | Edited on 28/07/2022

 

ward members Complaining The husband of the chairman of the municipal council threatened

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளபட்டி சிறப்புநிலை பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் 17 வார்டுகளில் தி.மு.க. உறுப்பினர்களும், ஒருவார்டில்  சுயேட்சையாக போட்டியிட்ட ஜெயகிருஷ்ணன் என்பவரும் வென்றனர். ஜெயகிருஷ்ணன் வெற்றி பெற்ற பின்பு, தி.மு.க.வில் இணைந்ததால் மொத்தம் 18 தி.மு.க. கவுன்சிலர்கள் உள்ளனர். இவர்களில் பேரூராட்சி மன்றத் தலைவராக பிரதீபா கனகராஜும், துணைத் தலைவராக ஆனந்தி பாரதிராஜாவும் உள்ளனர். 

 

இந்த நிலையில், பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் பேரூராட்சி வளாகம் மாடியில் உள்ள அறிஞர் அண்ணா கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி மன்றத் தலைவர் பிரதீபா கனகராஜ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஆனந்தி பாரதிராஜா முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் நந்தகுமார் வரவேற்று பேசினார். கூட்டத்தில் முதல் தீர்மானமாக பிறப்பு, இறப்பு குறித்து தீர்மானம் வந்தது. அப்போது, தி.மு.க. வார்டு உறுப்பினர் ராஜசேகர், “சின்னாளபட்டியில் கடந்த மாதம் 36 பேர் பிறந்துள்ளனர் என அறிக்கை கொடுத்துள்ளீர்கள். இதில் எத்தனை குழந்தைகள் அரசு மருத்துவமனையில் பிறந்துள்ளது? எத்தனை குழந்தைகள் தனியார் மருத்துவமனையில் பிறந்துள்ளது என்ற விவரம் வேண்டும்” என கேட்டார்.

 

அதற்கு செயல் அலுவலர் நந்தகுமார், “அடுத்த கூட்டத்தில் தெளிவான விவரங்களுடன் தீர்மானம் கொடுக்கப்படும்” என்றார்.

 

ward members Complaining The husband of the chairman of the municipal council threatened

 

அதன்பின்னர் இதற்கு முன்பு நடைபெற்ற கூட்ட தீர்மான புத்தகத்தை பார்க்க வேண்டும் என அனைத்து வார்டு உறுப்பினர்களும் கேட்டுக் கொண்டதால் பேரூராட்சி மன்றத் தலைவர் பிரதீபா கனகராஜ், கூட்டத் தீர்மான புத்தகத்தை கவுன்சிலர்கள் பார்வையிட கொடுத்தார். அதை பார்த்த வார்டு உறுப்பினர்கள் அனைவரும் “2வது கூட்டத்தில் 10 கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்துள்ளோம். கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் ஒப்புதல் கொடுத்ததாக எழுதியுள்ளீர்கள்” என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பேரூராட்சி மன்றத் தலைவர் பிரதீபா கனகராஜ் பேசுகையில், “கூட்டத்தில் தீர்மான ஒப்புதலுக்கு 18 கவுன்சிலர்களில் 6 பேர் இருந்தால் மட்டும் போதும் தீர்மானம் நிறைவேற்றியதாக எழுதிக் கொள்ளலாம்” என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க. வார்டு உறுப்பினர் ராஜு, “6 கவுன்சிலர் மட்டும் தீர்மானத்தில் ஒப்புதல் கொடுத்தால் போதும் என்றால் மற்ற வார்டுகளில் எதற்கு தேர்தல் நடத்த வேண்டும்” என கேள்வி எழுப்பினார். அதைத் தொடர்ந்து 4வது வார்டு உறுப்பினர் ஜெயகிருஷ்ணன், “எனது வார்டில் விடுமுறை நாட்களில் பேரூராட்சி குழாய் பொருத்துநர்கள் குழி தோண்டி குழாய் பதிக்கும் பணியில் ஈடுபடுகிறார்கள். இதை கேட்கும்போது எங்கள் உறவு கவுன்சிலருக்குள் தகராறு ஏற்படுகிறது” என்றார். இதற்கு பதில் அளித்த செயல் அலுவலர், “இதுகுறித்து குழாய் பொருத்துநரிடம் விசாரித்த பின்பு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். 

 

வார்டு உறுப்பினர் ஜெயகிருஷ்ணன், “பேரூராட்சி மன்றத் தலைவர் பிரதீபா கனகராஜ், 6 உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்தால் போதும் என்கிறார். பிறகு எதற்கு நாங்கள் கூட்டத்திற்கு வரவேண்டும். பேரூராட்சி மன்றத் தலைவரின் கணவர் கனகராஜ் பேரூராட்சியில் அனைத்து வேலைகளிலும் தலையிடுகிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பெண் உள்ளாட்சி பிரநிதிகளின் கணவர்கள் அலுவலக பணியில் தலையிடக்கூடாது என உத்தரவிட்டும் பேரூராட்சி மன்றத் தலைவரின் கணவர் அத்துமீறி செயல்படுவதோடு வார்டு உறுப்பினர்களுக்கு மிரட்டலும் விடுகிறார். எனது உயிருக்கும், பெண் வார்டு உறுப்பினர்களின் உயிருக்கும் முறையான பாதுகாப்பு இல்லை” எனக் கூறி, வார்டு உறுப்பினர்கள் வேல்விழி, ஜெயகிருஷ்ணன், செல்வகுமாரி, ஹேமா, லட்சுமி, காமாட்சி, ராஜாத்தி, ராசு, செல்வி, தாமரைச்செல்வி உட்பட 10 வார்டு உறுப்பினர்கள் வாயில் கருப்புத்துணி கட்டி வெளிநடப்பு செய்தனர். அதன்பின்னர் பேரூராட்சி வளாகத்தில் உறுப்பினர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், வெளிநடப்பு செய்த 10 வார்டு உறுப்பினர்களும் பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள காவல்நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

ward members Complaining The husband of the chairman of the municipal council threatened

 

அப்போது அவர்கள், “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தொகுதியின் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆகியோருக்கு என்றும் நாங்கள் விசுவாசத்துடன் இருப்போம். ஆனால் பேரூராட்சி மன்றத் தலைவர் பிரதீபாவின் அலட்சிய பேச்சு மற்றும் அவரது கணவர் கனகராஜின் மிரட்டல்களால் எங்கள் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. அதனால் நாங்கள் இந்த தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இதுகுறித்து கூட்டுறவுத்துறை அமைச்சரிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் புகார் மனு கொடுக்க முடிவு செய்துள்ளோம்” என்றனர். 


சின்னாளபட்டி சிறப்புநிலை பேரூராட்சியில் முதல்கூட்டம் முதல், இதுவரை நடந்த ஐந்து கூட்டங்கள் வரை அனைத்திலும் வார்டு உறுப்பினர்கள் பேரூராட்சி மன்றத்தலைவர் பிரதீபாவிற்கு எதிராக வெளி நடப்பு மற்றும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்