Ward member passed away police suspecting her husband

வாழப்பாடி அருகே, திருமணமான 55 நாள்களில் ஊராட்சி மன்ற பெண் வார்டு உறுப்பினர் தற்கொலை செய்து கொண்டது ஏன் என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertisment

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள ஆரியபாளையம் ஊராட்சி மேற்காட்டைச் சேர்ந்தவர் நடராஜன். இவருடைய மகன் வெற்றிவேல் (29). ஆத்தூரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ரம்யா (25). இவர், ஆரியபாளையம் ஊராட்சி மன்றம் 2வது வார்டு உறுப்பினராக இருந்தார். வெற்றிவேலுக்கும், ரம்யாவுக்கும் கடந்த ஜூன் 13ம் தேதி திருமணம் நடந்தது. ஆடிப்பிறப்பையொட்டி ரம்யாவை, அவருடைய தந்தை அண்ணாதுரை, தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.

Advertisment

இரு நாள்களுக்கு முன்பு ரம்யாவை அவருடைய கணவரும், மாமனாரும் நேரில் சென்று தங்கள் வீட்டிற்கு அழைத்து வந்தனர். அன்று இரவு சாப்பிட்டுவிட்டு அவரவர் தூங்கச் சென்றனர். எல்லோரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த நிலையில் ரம்யா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகள் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக ரம்யாவின் தந்தை அண்ணாதுரை, ஏத்தாப்பூர் காவல்நியைத்தில் புகார் அளித்தார். திருமணம் ஆன 55 நாள்களுக்குள் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டதால், இச்சம்பவம் குறித்து ஆத்தூர் கோட்டாட்சியர் சரண்யா விசாரணை நடத்தினார்.

வெற்றிவேலுக்கு திருமணத்திற்கு முன்பே ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்து வந்ததாகவும், அந்தப் பெண்ணுடன் உள்ள தொடர்பைக் கைவிடுமாறு ரம்யா பலமுறை எச்சரித்தும், அவர் பழக்கத்தைத் தொடர்ந்து வந்ததாகவும் அதனால், விரக்தி அடைந்த ரம்யா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக காவல்துறையினர் இந்தக் கோணத்திலும் விசாரணை நடத்திவருகின்றனர்.

கோட்டாட்சியரின் விசாரணை அறிக்கை கிடைத்த பிறகு, அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.