Advertisment

ஒருதலைக் காதல் கொலைகளைத் தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்!

ஒருதலைக் காதல் கொலைகளைத் தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சென்னை கே.கே.நகரிலுள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்த அஸ்வினி என்ற மாணவி, நேற்று கல்லூரிக்கு அருகில் ஓர் இளைஞரால் கொடூரமான முறையில் கழுத்தை அறுத்து கொல்லப்பட்டிருக்கிறார். பட்டப்பகலில் நடைபெற்ற இந்தக் கொலை அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அளிக்கிறது. மாணவியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Advertisment

‘‘எனக்குக் கிடைக்காத நீ வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது’’ என வெறித்தனமாக கத்திக் கொண்டே அஸ்வினியின் கழுத்தை அறுத்து அழகேசன் கொலை செய்துள்ளார். பெண் மீது ஆணுக்கும், ஆண் மீது பெண்ணுக்கும் காதல் பிறப்பதை குறை கூற முடியாது. ஆனால், ‘‘பெண்கள் எனப்படுபவர்கள் காதலிக்கப்படுவதற்காக மட்டுமே பிறந்தவர்கள். அவர்களுக்கென எந்த உணர்வும், விருப்பமும் இருக்கக் கூடாது. காதலைச் சொன்னால் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதை மீறி நம்மைக் காதலிக்க மறுப்பவர்கள் வேறு யாருடனும் மட்டுமின்றி, இந்த உலகத்திலேயே வாழத் தகுதியற்றவர்கள்’’ என்று நினைக்கும் சாத்தான் குணம் பல இளைஞர்களின் மனதில் ஊறியிருப்பதும், அந்தத் தீய குணம் அவர்களைச் சுற்றியுள்ளவர்களால் ஊக்குவிக்கப்படுவதும் தான் மாணவிகள் உள்ளிட்ட பெண்களின் பாதுகாப்புக்கு சவாலாக மாறியிருக்கிறது.

தமிழகத்தில் கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் சென்னை சூளைமேடு பொறியாளர் சுவாதி, விழுப்புரம் வ.பாளையம் மாணவி நவீனா, கரூர் பொறியியல் மாணவி சோனாலி, தூத்துக்குடி ஆசிரியை பிரான்சினா, விருத்தாசலம் பூதாமூர் செவிலியர் புஷ்பலதா, கோவை தன்யா என இருபத்தி ஐந்துக்கும் அதிகமான இளம் பெண்கள் ஒருதலைக் காதல் வெறிக்கு இரையாகி தங்கள் உயிரை இழந்திருக்கின்றனர். இத்தகைய படுகொலைகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள் என பெண்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும்; அனைத்து மாவட்டங்களிலும் மகளிர் மட்டும் பேருந்துகளை அதிக எண்ணிக்கையில் இயக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வரும் போதிலும், அதை காதில் வாங்கிக் கொள்ள பினாமி அரசு மறுக்கிறது.

புற்றுநோயைப் போல பரவி வரும் பாலியல் சீண்டல் கொலைகள் தடுக்கப்பட வேண்டும்; பெண்களை பின்தொடர்ந்து வந்து பாலியல் தொல்லைகளில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை அளிக்கப்பட வேண்டும். பாலியல் பலாத்காரம் செய்பவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று 2013-ல் தமிழக அரசு அறிவித்த 13 அம்ச திட்டத்தில் கூறப்பட்டிருந்தது. பெண்களை பின்தொடர்ந்து சென்று தொல்லை தருபவர்களையும் இச்சட்டப்படி தண்டிக்கத் தொடங்கினாலே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்து விடும். குண்டர் தடுப்புச் சட்டம் என்பது மிக மோசமான ஆயுதம் என்றாலும் கூட அடங்க மறுக்கும் பெண்களுக்கு எதிரான குற்றவாளிகள் மீது அதைப் பயன்படுத்துவதில் தவறில்லை.

தமிழ்நாட்டில் ஒருதலைக் காதலால் இன்னொரு பெண் படுகொலை செய்யப்படக்கூடாது என்பது தான் ஆட்சியாளர்களின் நோக்கமாக இருக்க வேண்டும். அதற்கேற்ற வகையில் பெண்களுக்கு எதிரான அனைத்துக் குற்றங்களையும் தடுக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ramadas aswini
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe