Advertisment

வளர்மதி , பகத்சிங், திருமுருகன் காந்தியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்

க்

இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், நாடு முழுவதும் பேச்சுரிமை, எழுத்துரிமைக்கு ஆபத்து - ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்று அறைகூவல் விடுத்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை:

Advertisment

’’நாடு முழுவதும் இடதுசாரி சிந்தனையாளர்கள், தலித் மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். 2018 ஜனவரி 1 அன்று மஹராஷ்டிராவில் உள்ள பீமா கோரேகான் கிராமத்தில் உள்ள நினைவுச் சின்னத்தில் பல்லாயிரக்கணக்கான தலித் மக்கள் அஞ்சலி செலுத்த திரண்ட போது சங்பரிவார் கும்பலைச் சேர்ந்தவர்கள் திட்டமிட்டு வன்முறையை ஏவி பெரும் கலவரத்தை உருவாக்கினர். இச்சம்பவத்திற்கு பொறுப்பான சங்பரிவார் கூட்டத்தினர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக, புனே காவல்துறையினர் இடதுசாரி சிந்தனையாளர்களான ஹைதராபாத்தைச் சேர்ந்த கவிஞர் வரவரராவ், மும்பையைச் சார்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர்கள் வெர்னான், கான்சால்வஸ், அருண் பெரைரா, தொழிற்சங்க வாதியும், வழக்கறிஞருமான சுதா பரத்வாஜ் மற்றும் டில்லியில் உள்ள மனித உரிமை செயல்பாட்டாளர் கவுதம் நவலகா ஆகியோரை கைது செய்துள்ளனர். இவர்களது வீடுகளிலும் தலித் உரிமை செயல்பாட்டாளர்கள் ஆனந்த் டெல்டும்டே, ஸ்டான்ஸ் ஸ்வாமி ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடத்தியுள்ளனர். மேலும் பலரையும் நாடு முழுவதும் தேடி வருகின்றனர்.

Advertisment

இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கருத்து வேறுபாடு உள்ளவர்களை கைது செய்வது ஜனநாயக விரோதமானது என்று சாடியதுடன், கைது செய்தவர்களை அவர்களது வீட்டுக்காவலிலேயே வைக்க உத்தரவிட்டுள்ளது. மத்தியிலும், மாநிலங்களிலும் உள்ள பிஜேபி ஆட்சியாளர்கள் இத்தகைய ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதோடு, மறுபக்கம் அப்பாவி சிறுபான்மையினர் மற்றும் தலித்துகளை பொய்யான காரணங்களைச் சொல்லி கும்பலாக திரண்டு தாக்குதல் தொடுத்து படுகொலை செய்து வருகின்றனர். ஜூன், ஜூலை மாதத்தில் மட்டும் சுமார் 20க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

பாஜக ஆட்சியில் நடைபெறும் இத்தகைய அராஜகமான நடவடிக்கை அவசர கால கொடுமைகளுக்கு ஒப்பானதாகும். அரசியல் சாசனம் வழங்கியுள்ள ஜனநாயக உரிமைகளுக்கு முற்றிலும் மாறானது ஆகும்.

இதேபோன்று தமிழகத்திலும் அதிமுக அரசு ஜனநாயக உரிமைகளை காலிலே போட்டு மிதித்து வருகிறது. வெள்ள நிவாரண நிதி வசூலில் ஈடுபட்ட மாணவி வளர்மதியிடம் காவலர் ஒருவர் ஆபாசமாக நடந்து கொண்டதை தட்டிக் கேட்டதற்காக அவர் மீதே கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமை மாநாட்டில் கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றினார் என்ற காரணத்தைக் கூறி மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது மீண்டும் மீண்டும் வழக்குகள் பதிவு செய்ததோடு, கொடூரமான ‘யுஏபிஏ’ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள்.

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்காக போராடிய அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் பழனியைச் சேர்ந்த பகத்சிங் மீது பொய்யான முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ததோடு, அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

வளர்மதி , திருமுருகன் காந்தி, பகத்சிங் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்வதோடு, பொய் வழக்கு போட்ட சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எட்டுவழிச்சாலையை எதிர்த்து பத்திரிகைகளுக்கு பேட்டியளித்த சிபிஐ (எம்) சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் பி. டில்லிபாபு, சம்பந்தப்பட்ட கிராம மக்களை சந்தித்து கலந்துரையாடச் சென்ற கே.பாலபாரதி, காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் இ.சங்கர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கோவை குடிநீர் விநியோகத்தை சூயஸ் என்ற பன்னாட்டு நிறுவனத்திற்கு வழங்கியதை கண்டித்துப் போராடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநிலக் குழு உறுப்பினர்கள் சி.பத்மநாபன், ராதிகா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அனைத்திற்கும் மேலாக தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து அமைதியான முறையில் போராட்டம் நடத்த வந்த மக்கள் மீது கொடூரமான முறையில் துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேர் உயிரை பறித்ததோடு, 200க்கும் மேற்பட்ட அப்பாவிகள் படுகாயமுற்று இன்றைக்கும் கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்துப் போராடிய சமூக செயல்பாட்டாளர்கள் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

தமிழகம் முழுவதும் சாதாரண பிரச்சனைகளுக்காக கூட போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. 8வழிச் சாலையை எதிர்த்து நடை பயணம் மேற்கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் கைது செய்யப்பட்டு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பாஜக, அதிமுக ஆட்சியினர் ஜனநாயக உரிமைகளுக்கு சாவு மணி அடித்து பேச்சுரிமை, எழுத்துரிமை பறிக்கும் மோசமான நடவடிக்கைகளை கையாண்டு வருகின்றனர்.

இத்தகைய, ஜனநாயக விரோத, அராஜகமான போக்கினை எதிர்த்து அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டு குரல்கொடுக்க முன்வர வேண்டுமென மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.’’

K.Balakrishnan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe