ADVERTISEMENT

மனையோ பணமோ இரண்டில் ஒன்று வேண்டும்.. கோட்டாட்சியர் அலுவலகத்தில் போராடிய மக்கள்! 

05:41 PM Jul 07, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை பேரூராட்சியிலும் அதன் சுற்று வட்டாரத்திலும் மொத்தம் 20 நகர் பிரிவுகளை உருவாக்கி மனை விற்பனை செய்ய மாத தவணையில் பணம் செலுத்தினால் குலுக்கல் முறையில் மாதாமாதம் தங்க நகைகள், வெள்ளி நகைகள், மோட்டார் சைக்கிள், டி.வி, பிரிஜ், வாஷிங்க் மிஷீன் போன்றவை கிடைக்கும், அதைத்தாண்டி கடைசி மாதம் பணம் கட்டி முடித்ததும் மனை வழங்கப்படும் எனக் கவர்ச்சி விளம்பரங்களைக் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் குறிப்பிட்ட சிலர் செய்துள்ளனர்.

இதனை நம்பி ஆயிரக்கணக்கான மக்கள் மாதாமாதம் தவணை முறையில் கடந்த 2012 ஆண்டு முதல் பணம் செலுத்தி உள்ளனர். இதில் மனை வாங்க பணம் கட்டி ஏமாந்த பெண்கள், ஒவ்வொருவரும் மாதம் ரூ. 1500 துவங்கி ரூ. 2500 வரை பல ஆண்டுகள் செலுத்தி உள்ளனர். குறைந்தபட்சம் ரூபாய் 65,000 துவங்கி ரூபாய் 2,50,000 வரை கட்டி உள்ளனர். 10 ஆண்டுகள் கடந்தும் இதுவரை எந்த நகர் உரிமையாளர்களும் மனையை பதிவு செய்து கொடுக்கவில்லை. வாங்கிய பணத்தையும் திரும்பிக் கொடுக்கவில்லை. தங்கள் சேமிப்பு பணத்தை மனை பிரிவு வாங்க கொடுத்து அப்பாவி மக்கள் பரிதவித்தனர்.

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றிய அலுவலகத்தில் 240 நபர்கள், தங்கள் மனை பிரிவுக்கு கட்டிய தொகையே ரூபாய் 1,66,55,680 என்று கட்டிய ரசீதுடன் புகார் செய்துள்ளனர். இன்னும் நூற்றுக்கணக்கான மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். கோடி கோடியாய் மக்களிடம் பணம் பெற்றவர்கள் உல்லாசமாகச் சுற்றித் திரிகின்றனர்.

எனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மனை அல்லது பணம் என்ற இயக்கம் கடந்த மாதம் துவக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களின் கூட்டம் நடத்தப்பட்டது, சிதம்பரம் டி.எஸ்.பியிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று, சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் விஜய் தலைமை தாங்கினார். கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, மாவட்ட குழு உறுப்பினர் ராஜா, பரங்கிப்பேட்டை நகர செயலாளர் வேல்முருகன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஜெயசீலன், ஹசம் முகமது, பாண்டியன், குலஞ்சியப்பன், அருள்தீபன், லெனின் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். சரியான நடவடிக்கை இல்லையென்றால் மனைக்கு பணம் கட்டி ஏமாந்த அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்து அனைத்து தரப்பினர் கவனத்தை ஈர்க்கும் வகையில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT