Skip to main content

விளையாடிய இடத்தில் காத்திருந்த ஆபத்து! பட்டாசு விபத்தில் சிக்கிய பள்ளி மாணவர்கள்!

Published on 08/07/2018 | Edited on 08/07/2018
siv

 

பட்டாசுத் தொழிலில்,  தொடர்ந்து விதிமீறல் செய்துவருபவர்களால்,  சிறுவர்கள் விளையாடுவதற்குகூட தகுதியில்லாத ஊராகிவிட்டது சிவகாசி.   ‘ஒரேயடியாக இப்படிச் சொன்னால் எப்படி?’ என்று கொந்தளிப்பார்கள் பட்டாசு ஆலை அதிபர்கள். அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துவிட்டு, எந்த ஒரு காரியத்தையும் துணிந்து பண்ணலாம் என்பது சிலருடைய எண்ணமாக இருக்கிறது. அதனால்தான், சீரியஸாக சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.   ஒரு  துளி விஷமானது,  ஒரு குடம் பாலை விஷமாக்கிவிடும் அல்லவா? அப்படி ஒரு சம்பவம்தான் இன்று (8-7-2018) சிவகாசியில் நடந்திருக்கிறது. 

 

பள்ளி மாணவர்களான பெர்தீபனும் அருண்குமாரும் நண்பர்கள்.  சிவகாசி – மீனம்பட்டியைச் சேர்ந்தவர்கள். ஞாயிறு விடுமுறை என்பதால், விளையாடுவதற்காக நாரணாபுரம் சாலையில் உள்ள ஓடைக்குச் சென்றனர். அங்கு விதிமீறலாக, பொது இடமான ஓடையில் பட்டாசுக் கழிவுகள் கொட்டப்பட்டிருந்தன. சிறுவர்கள் இருவரும் விளையாட்டாக, தீக்குச்சியைப் பற்ற வைத்து,  அந்தக் கழிவுகள் மீது வீசியிருக்கின்றனர். அப்போது கழிவுக்குவியல் வெடித்துச் சிதறியதில், இருவரும் தூக்கி வீசப்பட்டனர். அருண்குமார் 30 சதவீத தீக்காயங்களுடனும், பெர்தீபன் 60 சதவீத தீக்காயங்களுடனும் சிவகாசி அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவருகின்றனர்.     

 

பட்டாசு ஆலை வாகனங்கள் மூலம் வெளியே எடுத்து வரும் கழிவுகளை, அனுமதிக்கப்பட்ட இடங்களில்,   சம்பந்தப்பட்ட பட்டாசு ஆலை பொறுப்பாளரின் மேற்பார்வையில் தீவைத்து சாம்பலாக்கிவிட வேண்டும். இதைச் செய்யாமல், கண்ட இடத்திலும் பட்டாசுக் கழிவுகளைக் கொட்டுவது அப்பட்டமான விதிமீறல் ஆகும். சிவகாசி கிழக்கு காவல்நிலையத்தில் இந்த வழக்கு பதிவாகி, விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. 

 

விபத்து என்பது பட்டாசு ஆலையிலோ,  பட்டாசுக் கடையிலோதான்  நடப்பது வழக்கம். சிறுவர்கள் விளையாடும் இடங்களையும் விட்டுவைக்காமல், விபத்துக்கு வழிவகுத்திருப்பது கொடுமைதான்!

சார்ந்த செய்திகள்