வாக்காளர் நல்லவரா? வறுமையின் காரணமாக ஒவ்வொரு வாக்குக்கும் பணம் வாங்கக்கூடிய அவல நிலையில் வாழ்பவரா? என்பதை, அவரது வாக்குச்சாவடி சீட்டே அடையாளம் காட்டிவிடும். எப்படி தெரியுமா? இந்த உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்கள் படு விவரமாகவே செயல்படுகிறார்கள். வாக்குச்சாவடி சீட்டைக் காண்பித்தால், அதன் பின்னால் சின்னதாக ஒரு ‘இனிஷியல்’ போட்டு, ஓட்டுக்கான பணத்தையும் வாக்குச்சாவடி சீட்டையும், அந்த வாக்காளரிடம் கொடுத்து விடுகிறார்கள். எதற்காக இந்த நடைமுறை என்றால், ‘வீடு வீடாகப் போய் பணம் கொடுப்பதென்றால் அலைய வேண்டும். அந்தப் பழைய நடைமுறை தேவையில்லை. யாரெல்லாம் ஓட்டுக்குப் பணம் வாங்க வேண்டுமென்ற ஆவலில் இருக்கிறார்களோ, அவர்களே நம்மைத் தேடி வந்து பெற்றுக்கொள்ளட்டும்’ என்று மாற்று யோசித்ததன் விளைவே, இந்தப் புதிய நடைமுறை. இதன்மூலம், ஏற்கனவே ஒரு வேட்பாளரிடம் பணம் வாங்கியவர், அதே வேட்பாளரிடம் மீண்டும் பணம் பெற முடியாது. ஏனென்றால், வாக்குச்சாவடி சீட்டைப் புரட்டிப் பார்த்தாலே, அவர் தன்னிடம் பணம் வாங்கியவரா? இல்லையா? என்பது தெரிந்துவிடும்.
இதில் வேடிக்கை என்னவென்றால், ஒரே வாக்காளர் எத்தனை வேட்பாளர்களிடம் வேண்டுமானாலும் பணம் பெற்றுக்கொள்ள முடியும். போட்டியிடும் வேட்பாளர்களும், இந்த வாக்காளர் அத்தனை வேட்பாளர்களிடமும் பணம் வாங்கிக்கொள்ளட்டும். தன்னிடமிருந்தும் பணம் பெற்றதால், ஒருவேளை தனக்கும் அவர் வாக்களிப்பதற்கான வாய்ப்பை உருவாக்கியிருக்கிறோம் என, தற்காலிக ஆறுதலடைவதுதான்.
சட்டம் என்ன சொல்கிறது?
‘தேர்தலின்போது ஓட்டுக்காக பணமோ, பரிசுப் பொருட்களோ வாங்கினால் லஞ்ச ஒழிப்பு சட்டத்தில் வழக்கு பதியப்படும். வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்போர் மற்றும் பணம் பெறுவோர் மீ்து, இந்திய தண்டனைச் சட்டம் 171 பி பிரிவின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒராண்டு சிறை தண்டனை விதிக்க முடியும்.’
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/panam petravar vaakku savadi seetu.jpg)
இந்த உள்ளாட்சி தேர்தலில் சிவகாசி ஒன்றியத்தில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதுமே வேட்பாளர்கள் பலரும் வாக்குகளை விலைபேசி விட்டார்கள். பறக்கும் படை, தேர்தல் மேற்பார்வையாளர்களின் செயல்பாடெல்லாம் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை. பெயரளவுக்கே வழக்குகள் பதிவாகின்றன.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/panam petravar vaakku savadi seetil pinpakkam initial.jpg)
வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை என்பதை எடுத்துச்சொல்லும் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு தினமெல்லாம் ஆண்டுதோறும் வந்துபோகிறது. வாக்களிப்பது நம் நாடு நமக்கு அளித்த உரிமை. அந்த உரிமையை மிகச்சரியாகப் பயன்படுத்துவது நமது தலையாய கடமை என்பதை வாக்காளர்களில் பலரும் உணரவில்லை என்பதுதான் நிதர்சனம்.
Follow Us