Skip to main content

உள்ளாட்சி தேர்தல்: சேலம் மாவட்டத்தில் நாளை (02.01.2020) வாக்கு எண்ணிக்கை! 14500 ஊழியர்களுக்கு பணி ஒதுக்கீடு!!

Published on 01/01/2020 | Edited on 01/01/2020

சேலம் மாவட்டத்தில், இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (ஜன. 2) எண்ணப்படுகின்றன. இதில், 14500 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.


சேலம் மாவட்டத்தில் 20 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இவற்றில், 12 ஒன்றியங்களுக்கு உட்பட்ட உள்ளாட்சி பதவிகளுக்கு முதல்கட்டமாக கடந்த 27.12.2019ம் தேதியும், 8 ஒன்றியங்களுக்கு உட்பட்ட உள்ளாட்சி பதவிகளுக்கு இரண்டாம் கட்டமாக டிசம்பர் 30, 2019ம் தேதியும் தேர்தல் நடந்தது.  
 

 Vote counting in the Salem District tomorrow  14500 Employees Allocated


இத்தேர்தல்களில் பதிவான வாக்குகளை எண்ண, ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஒரு மையம் ஒதுக்கப்பட்டு உள்ளது. அதன்படி, சேலம் மாவட்டத்தில் 20 வாக்கு எண்ணும் மையங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இரண்டு கட்டத் தேர்தல் முடிந்த பிறகு, வாக்குப்பெட்டிகள் அனைத்தும் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு உள்ளது. வெப் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இம்மையங்களில் 3 அடுக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.


சேலம் மாவட்டத்தில், வாக்கு எண்ணும் மையங்கள் விவரம் (ஒன்றியத்தின் பெயர்கள் அடைப்புக்குள் உள்ளன) வருமாறு:


1. தளவாய்பட்டி காயத்ரி மேல்நிலைப்பள்ளி (சேலம்) 
2. பெருமாகவுண்டன்பட்டி அரசு ஆண்கள் பள்ளி (வீரபாண்டி) 
3. மல்லூர் அரசு ஆண்கள் மாதிரி பள்ளி (பனமரத்துப்பட்டி) 
4. வைஸ்யா கல்லூரி (அயோத்தியாப்பட்டணம்) 
5. செயின்ட் மைக்கேல் மெட்ரிக் பள்ளி (வாழப்பாடி) 
6. ஏற்காடு அரசு மேல்நிலைப்பள்ளி (ஏற்காடு) 
7. பெத்தநாயக்கன்பாளையம் அரசு ஆண்கள் பள்ளி (பெத்தநாயக்கன்பாளையம்) 
8. ஆத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி (ஆத்தூர்) 
9. கெங்கவல்லி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி (கெங்கவல்லி) 
10. மாருதி மேல்நிலைப்பள்ளி (தலைவாசல்) 
11. நிர்மலா மேல்நிலைப்பள்ளி (கொளத்தூர்) 
12. கைலாஷ் கலை, அறிவியல் கல்லூரி (நங்கவள்ளி) 
13. கைலாஷ் காவேரி பொறியியல் கல்லூரி (மேச்சேரி) 
14. தாரமங்கலம் செங்குந்தர் மகாஜன மேல்நிலைப்பள்ளி (தாரமங்கலம்) 
15. பத்மவாணி கலை, அறிவியல் கல்லூரி (ஓமலூர்) 
16. சுவாமி விவேகானந்தா வித்யாலயா பள்ளி (காடையாம்பட்டி) 
17. சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி (சங்ககிரி) 
18. இடைப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி (இடைப்பாடி) 
19. கொங்கணாபுரம் அரசு ஆண்கள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி (கொங்கணாபுரம்) 
20. மகுடஞ்சாவடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி (மகுடஞ்சாவடி).


இந்த மையங்களில் நாளை (ஜன. 2, 2020) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. ஒவ்வொரு ஒன்றியத்திலும் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர், ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய 4 பதவிகளுக்கான வாக்குச்சீட்டுகளை பிரிக்கும் பணிகள் முதலில் நடக்கும். இப்பணிகளை கண்காணிக்க ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு மேற்பார்வையாளர், 3 உதவியாளர் என நான்கு பணியாளர்கள் இருப்பார்கள். அதேபோல், வாக்கு எண்ணும் பணிக்கு அமைக்கப்படும் மேஜையில் ஒரு மேற்பார்வையாளர், 2 உதவியாளர்கள் என மொத்தம் 3 ஊழியர்கள் இருப்பார்கள். 


வாக்குப்பெட்டிகளை இருப்பு அறையில் இருந்து வாக்குச்சீட்டு பிரிக்கும் அறைக்குக் கொண்டு சேர்க்கும் பணிக்கும், அங்கிருந்து வாக்குகள் எண்ணும் அறைகளுக்குக் கொண்டு செல்லும் பணிக்கும் குறைந்தபட்சம் 8 உதவியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஆக, ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையங்களிலும் உள்ளாட்சி பதவி வாரியாக வாக்குச்சீட்டுகளை பிரித்தல், வாக்கு எண்ணிக்கை ஆகிய பணிகளுக்காக சேலம் மாவட்டம் முழுவதும் 14500 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.


இவர்கள் மட்டுமின்றி, ஒவ்வொரு தொடக்க பிரிப்பு அறைகளுக்கும் ஒருவர் வீதமும், நான்கு பதவிகளுக்கும் வாக்கு எண்ணிக்கையைப் பார்வையிட ஒருவர் எனவும் நுண் பார்வையாளர்களும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.


வாக்கு எண்ணிக்கையின்போது, அந்தந்த வாக்கு எண்ணும் இடத்தில் வேட்பாளர்கள், அவர்களின் தேர்தல் முகவர்கள் இருக்கலாம். வாக்கு எண்ணும் பணியில் ஒரு மேஜைக்கு ஒரு முகவர் என்ற அடிப்படையில் வேட்பாளர்கள் தங்கள் முகவர்களை நியமிக்கலாம் என்று மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான ராமன் தெரிவித்துள்ளார்.


 

சார்ந்த செய்திகள்