ADVERTISEMENT

அதிமுக அலுவலகம் முன்பு குவிந்த தொண்டர்கள்; முடிவெடுக்கும் கட்டாயத்தில் எடப்பாடி

03:39 PM Sep 25, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

அதிமுக பாஜக கூட்டணியில் அண்ணாமலை பேச்சுகளால் முரண்கள் ஏற்பட்டு முன்னாள் அமைச்சர்கள் எதிர்வினையாற்றும் சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது. அண்மையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து அண்ணாமலை பேசியது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கு ஜெயக்குமார், சி.வி. சண்முகம் ஆகிய முன்னாள் அமைச்சர்கள் எதிர்வினை ஆற்றி இருந்தனர். அதேபோல அண்மையில் அண்ணா குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை பேசியது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக - பாஜக கூட்டணி இல்லை எனத் தெரிவித்திருந்தார். இந்த கருத்திற்கு அடுத்த இரண்டு நாட்களிலேயே பாஜக - அதிமுக கூட்டணியில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர் சந்திப்பில் தெளிவுபடுத்தி இருந்தார். இந்தநிலையில் மீண்டும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்ற கருத்தை அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

கூட்டணிக்காக பாஜகவிடம் அதிமுக பணிந்து போன பிறகும், அண்ணா பற்றிய தன்னுடைய பேச்சுக்கு அண்ணாமலை மன்னிப்பு தெரிவிக்க மறுத்துவிட்டார். கூட்டணி என்பதற்காக இறங்கி போக முடியாது என்ற அண்ணாமலையின் கருத்து அதிமுகவினருக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அண்ணாமலை குறித்து பாஜக தலைமையில் புகார் அளிப்பதற்காக மூத்த அதிமுக தலைவர்கள் டெல்லி சென்றிருந்த நிலையில், அவர்களை சந்திக்க மத்திய அமைச்சர் அமித்ஷா மறுத்துவிட்டார். அதனைத் தொடர்ந்து பியூஷ் கோயல், நட்டாவை மட்டும் சந்தித்து விட்டு திரும்பி இருந்தனர்.

அண்ணாமலையை மாற்ற வேண்டும் என நட்டாவிடம் அதிமுக தலைவர்கள் வைத்த கோரிக்கையை நாட்டா நிராகரித்ததாகக் கூறப்படுகிறது. பாஜக தம்மை உதாசீனப்படுத்துவதால் கூட்டணி முறிவை அதிமுக தலைமையே உறுதிப்படுத்த வேண்டும் என அதிமுகவினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்னும் சற்று நேரத்தில் அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. இதற்காக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர். சாதாரண தொண்டர்களும் அதிமுகவின் தலைமை அலுவலகம் முன்பு குவிந்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி வாய் திறந்தால் மட்டுமே கூட்டணி முறிவா அல்லது இல்லையா என்பது தெளிவாகத் தெரியும் என பாஜக தலைவர்கள் கருத்துக்களை தெரிவித்திருந்த நிலையில், இந்த கூட்டத்தில் பாஜக - அதிமுக கூட்டணி தொடர்பான உறுதியான முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதிமுகவிலேயே ஒரு தரப்பினர் பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என வலியுறுத்துவதாகவும், ஒரு தரப்பினர் கூட்டணி வேண்டாம் என வலியுறுத்துவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் எந்த நிலைப்பாட்டை ஏற்பது; இறுதி கட்ட முடிவு என்ன என்பது தொடர்பாக முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் எடப்பாடி பழனிசாமி உள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT