
தமிழக முதல்வர் ஸ்டாலின் மும்மொழி கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட விவகாரங்களில் ஒன்றிய பாஜக அரசை எதிர்த்து வருகிறார். அதனைத் தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கையாக தமிழகத்தின் உரிமைகளை பறிக்கத் துடிக்கும் ஒன்றிய அரசுக்கு பாடம் புகட்டவும், தமிழகத்தின் உரிமைக்காக தமிழ்நாடு ஒன்றுபட்டு போராடும் என்பதை டெல்லிக்கு எடுத்துக்காட்டவும் அனைத்துக்கட்சி கூட்டத்தை இன்று கூட்டியுள்ளார்.
இந்த கூட்டத்தின் முதல்வர் ஸ்டாலின் முன்னுரை நிகழ்த்தினார். மேலும், தென்னிந்திய மாநில பிரதிநிதிகள் அடங்கிய “கூட்டு நடவடிக்கை குழு” அமைப்பதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் அனைத்துக்கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பேசி வருகின்றனர். அதில், "முதலமைச்சர் மற்ற மாநிலங்களுக்கு நேரில் சென்று ஒருங்கிணைக்க வேண்டும்" என்று பாமக தலைவர் அன்புமணி வேண்டுகோள் வைத்துள்ளார்.
சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், "தென்னிந்திய மாநில பிரதிநிதிகள் அடங்கிய ‘கூட்டு நடவடிக்கை குழு’வை விசிக வரவேற்கிறது " என்றார். அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு 63 கட்சிகள் அழைக்கப்பட்ட நிலையில், 58 கட்சிகள் பங்கேற்றுள்ளன. பாஜக, புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதிக்கட்சி மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சிகள் மட்டும் அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.