Skip to main content

மருமகளை கொலை செய்த மாமனாருக்கு ஆயுள் தண்டனை...

Published on 23/11/2020 | Edited on 23/11/2020

 

vizhupuram asset issue

 

 

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகில் உள்ள மழவந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த 70 வயது சுப்பிரமணி. இவரது மனைவி ராணி. இவர்களுக்கு முருகன், சின்னதுரை ஆகிய இரு மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இவர்களுடைய மூத்த மகன் முருகன் மொத்த குடும்பத்தையும் அவரது மேற்பார்வையில் நடத்தி வந்துள்ளார். 

 

இந்த நிலையில் சுப்பிரமணிக்கு சொந்தமான 3 ஏக்கர் விவசாய நிலம், பம்புசெட் ஆகியவற்றை பாகம் பிரித்து தருமாறு முருகன் கேட்டுள்ளார். இந்த பாக பிரிவினையின்போது முருகனுக்கும் அவரது சகோதரர் தந்தை சுப்ரமணி, தாய் ராணி, தம்பி சின்ன பிள்ளை ஆகியோரிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. காரணம் மொத்த குடும்பப் பொறுப்புகளையும் முருகன் ஏற்று நடத்தி வந்ததால், அதன் மூலம் அனைவரும் சம்பாதித்து கொடுத்த பணத்தில் தனது மனைவி தனலட்சுமி பெயரில் தனியாக சொத்து வாங்கி உள்ளார். 

 

இதனால் முருகனுக்கு குடும்ப சொத்தில் பங்கு கிடையாது என்று அவர் தந்தை சுப்ரமணி, தாய் ராணி, தம்பி சின்னதுரை ஆகியோர் சேர்ந்து முருகனை வீட்டை விட்டு வெளியேற்றி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த முருகன், ஊர் முக்கியஸ்தர்களை அழைத்துவந்து பஞ்சாயத்தாரிடம் முறையிட்டுள்ளார். அதன்பேரில் ஊர் முக்கியஸ்தர்களின் ஆலோசனைப்படி சகோதரர்களுக்குள் குடும்ப சொத்தில் பாகம் பிரித்து  கொடுக்கப்பட்டுள்ளது. 

 

இதனால் முருகன் மீது மேலும் கோபம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி முருகன் தனக்கு பாகம் பிரித்துக் கொடுத்த நிலத்தில் விவசாய வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது ஏற்கனவே கோபத்தில் இருந்த அவரது தந்தை சுப்பிரமணி, தம்பி சின்னதுரை, தாய் ராணி ஆகிய மூவரும் முருகனிடம் தகராறு செய்துள்ளனர். இந்த தகராறின்போது மூவரும் சேர்ந்து முருகனை கத்தியால் குத்தி உள்ளனர். 

 

முருகனுடன் வயலில் வேலை செய்து கொண்டிருந்த அவரது மனைவி தனலட்சுமி இதை கண்டு அதிர்ச்சி அடைந்து ஓடி வந்து தடுத்துள்ளார். உடனே இதை பார்த்த மூவரும் குடும்ப சொத்து பங்கு பிரிப்பதற்கு நீ தான் காரணம் என்று கூறி தனலட்சுமியையும் கத்தியால் குத்தி உள்ளனர். இதில், சம்பவ இடத்திலேயே தனலட்சுமி உயிரிழந்துள்ளார். உயிருக்கு போராடிய முருகனை மீட்டு அருகில் உள்ள திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். பின்னர் அவர் சிகிச்சையில் நலம் பெற்று வீடு திரும்பியுள்ளார். 

 

இதுகுறித்த புகாரின் பேரில் கண்டாச்சிபுரம் போலீசார் சின்னதுரை சுப்பிரமணி ராணி ஆகியோர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி கூட்டு சதி ஆகியவை உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின்படி வழக்கு பதிவு செய்து மூவரையும் கைது செய்தனர். தொடர்ந்து இந்த வழக்கு விழுப்புரம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணையின்போதே ராணி இறந்துபோனார். இந்த வழக்கு விசாரணைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி இந்த வழக்கில் மகளிர் நீதிமன்ற நீதிபதி சாந்தி, தீர்ப்பு வழங்கியுள்ளார். 

 

அதில் சின்னதுரை, சுப்ரமணி ஆகியோருக்கு கொலை மற்றும் கூட்டுச்சதி பிரிவின் கீழ் இரட்டை ஆயுள் தண்டனையும் முருகனைக் கொலை செய்ய முயற்சித்ததற்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், இருவருக்கும் தலா ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இதனை தொடர்ந்து தந்தை, மகன் இருவரும் போலீஸ் பாதுகாப்புடன் கடலூர் சிறையில் கொண்டு சென்று அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞர் ராதிகா செந்தில் ஆஜரானார்.

 

 

சார்ந்த செய்திகள்