Skip to main content

ரேஷன் கடையில் காலாவதியான உணவுப் பொருட்கள்..?. மக்கள் போராட்டம்...

Published on 10/12/2020 | Edited on 10/12/2020

 

Vizhuppuram ration shop expiry goods


விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் ரோஷனை பகுதியில் இயங்கி வருகிறது அரசின் ரேஷன் கடை. இப்பகுதியில் வசிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர், அரசு வழங்கும் அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு, பாமாயில் உட்பட அனைத்து பொருட்களையும் இந்த ரேஷன் கடையில் இருந்துதான் வாங்கி வருகிறார்கள். 



நேற்று முன்தினம் இந்தக் கடையில், ராகி மாவு விற்பனை செய்யப்பட்டது. அந்த மாவை வாங்கிச் சென்று சாப்பிட்ட மக்கள் பலருக்கும் வாந்தி வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள், ரேஷன் கடை முன்பு திரண்டுவந்து மிச்சமிருந்த ராகி மாவு பாக்கெட்டுகளை கீழே கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 



காரணம், ரேஷன் கடையில் விற்கப்பட்ட ராகி மாவு காலாவதியானது என்றும் அதை அப்பாவி மக்களின் தலையில் காசுக்கு விற்பனை செய்யச் சொல்லி அதிகாரிகள் கூறியுள்ளது தெரியவந்துள்ளது. திண்டிவனம், வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் கீழ் செயல்பட்டுவரும் இந்த ரேஷன் கடையில் காலாவதியான பெருங்காயம், ராகி மாவு, சோப்பு, உப்பு, டீத்தூள், தீப்பெட்டி உள்ளிட்ட 19 வகையான பொருட்களை தேவை இருந்தாலும் இல்லாவிட்டாலும் கட்டாயப்படுத்தி மக்கள் தலையில் சுமத்தி வருகின்றனர் என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 

 


இதுகுறித்து ரேஷன் கடை பணியாளர்கள் சிலரிடம் கேட்டபோது, இப்படிப்பட்ட பொருட்களை விற்பனை செய்யுமாறு எங்களுக்கு மேல் உள்ள அதிகாரிகள்தான் வற்புறுத்துகிறார்கள். அதே நேரத்தில் காலாவதியான பொருட்களை விற்பனை செய்வதாக பொதுமக்கள் புகார் அளித்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளே கடைகளுக்கு ஆய்வு செய்ய வருவார்கள். பொது மக்களை திருப்திப்படுத்துவதற்காக எங்களுக்கு அபராதம் விதிப்பதும் எங்களை சஸ்பெண்ட் செய்வதும் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். இப்படி இரண்டு பக்கமும் பாதிக்கப்படுகிறோம் என்று நொந்துபோய் கூறுகிறார்கள் விற்பனையாளர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்