Skip to main content

ஆளுநர் வருகை; மார்க்சிஸ்ட், காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

Published on 28/01/2024 | Edited on 28/01/2024
Visit of the Governor Marxist, Congress party struggle

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று (28.01.2024) நாகைக்கு செல்ல உள்ளார். அதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள கீழ்வெண்மணி தியாகிகள் நினைவு இல்லத்திற்கு செல்ல உள்ளார். அங்கு கடந்த 1968 ஆம் ஆண்டு கீழ்வெண்மணியில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் குண்டு பாய்ந்து உயிர் தப்பிய தியாகி பழனிவேலை (வயது 83) சந்திக்க உள்ளார்.

இந்நிலையில் மேலவெண்மணி கிராமத்திற்கு ஆளுநர் ஆர்,என்.ரவி வருகை தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர், கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆளுநருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

முன்னதாக கீழ்வெண்மணி தியாகி பழனிவேல் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘இப்போது உள்ள சூழ்நிலையில் ஆளுநரை சந்திப்பதில் தனக்கு விருப்பம் இல்லை. நிலக்கிழார்களுக்கு எதிராக போராடியவர்களில் நானும் ஒருவன். இந்த போராட்டத்தின்போது குண்டடிபட்டு காயமுற்று பாதிக்கப்பட்டேன். அப்போது எல்லாம் வந்து என்னை சந்திக்காதவர்கள் இப்போது அவசர அவசரமாக வந்து சந்திப்பது ஏன்? அரசியல் ஆதாயத்திற்காக சந்திக்க வருகிறார்கள். என்னை பாஜக கட்சிக்கு இழுப்பதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி என்னை வந்து சந்திக்கவுள்ளார். தமிழக ஆளுநர் என்னை சந்திப்பதில் எனக்கு துளியும் விருப்பமில்லை’ எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்