
திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே அணையை முறையாக பராமரிக்கவில்லை என பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்து விஷ்வ ஹிந்து பரிஷத் இயக்கத்தினரும், விவசாயிகளும் திங்கட்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மணப்பாறை அடுத்த எளமணம் பகுதியில் உள்ள கண்ணூத்து அணையில் கடந்த மாதங்களில் பெய்த கனமழையால் தண்ணீர் தேங்கியுள்ளது. ஆனால், அணையின் கதவணையில் ஏற்பட்டுள்ள பழுதால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தண்ணீர் வீணாக வெளியேறி வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதியினர் பலமுறை பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்தே எளமணம் - புத்தாநத்தம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதாக விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற புத்தாநத்தம் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.