Advertisment

அண்ணனுக்கு ஒரு ‘மாவட்ட செயலாளர் பதவி’ பார்சல்! -இராஜகம்பளத்தாரின் உரிமைக்குரல்!

viruthunagar admk

Advertisment

ஒரு நிறுவனத்தில் வேலை காலியாக இருந்தால், அங்கு பணியாற்ற வாய்ப்பு கேட்டு, தங்களது தகுதி மற்றும் திறமையை பட்டியலிட்டு விண்ணப்பிப்பது நடைமுறையில் உள்ளதுதான். விருதுநகர் மாவட்டத்தில், அதிமுக மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து கே.டி.ராஜேந்திரபாலாஜியை நீக்கிய பிறகு, இம்மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, இரண்டு மாவட்ட செயலாளர்களை நியமிக்கக்கூடும் என்று பேசப்பட்டு வரும் நிலையில், மா.செ. பொறுப்பு கேட்டு, அதிமுக தலைமைக்கு விண்ணப்பம் அனுப்பி வருபவர்கள் அதிகரித்து வருகின்றனர்.

சாம்பிளுக்கு ஒரு விண்ணப்பம். இது, பி.வி.ராதாகிருஷ்ணன் என்ற தனிநபர் அனுப்பிய விண்ணப்பம் மட்டுமல்ல, அவர் சார்ந்த சமுதாயமும் சேர்ந்து அனுப்பிய விண்ணப்பம். அகில இந்திய தெலுகு சம்மேளனமும், வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜ கம்பள சமுதாய நலச்சங்கமும், தங்களது சமுதாயத்தைசேர்ந்த பி.வி.ராதாகிருஷ்ணனை, விருதுநகர் மாவட்ட அதிமுக செயலாளராக ஆக்குவதன் மூலம், கட்சி அடையப்போகும் பலனை, சிபாரிசு கடிதத்தில் விவரித்துள்ளது.

viruthunagar admk

Advertisment

தமிழகத்தில் 25 மாவட்டங்களில் 30 லட்சத்திற்கும் மேலான எண்ணிக்கையில் இராஜகம்பளத்து தொட்டிய நாயக்கர் மக்கள் வாழ்கின்றனர். விருதுநகர் மாவட்டம் தவிர, தூத்துக்குடி, இராமநாதபுரம், தேனி, மதுரை போன்ற தென் மாவட்டங்களிலும், திருச்சி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், திருப்பூர், ஈரோடு, கோவை, சேலம் போன்ற மத்திய மற்றும் மேற்கு மாவட்டங்களிலும் கம்பளத்தார் அதிகமாக உள்ளனர். ஆனாலும், விருதுநகர் மாவட்டமே முதன்மையானது. இம்மாவட்டத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் வாழ்கிறார்கள். பி.வி.ராதாகிருஷ்ணன் விருதுநகர் மாவட்ட செயலாளரானால், மேற்கண்ட மாவட்டங்களிலெல்லாம் கழகம் மிகப்பெரிய பலத்தைப் பெறும்.

அதிமுகவில் மாவட்ட செயலாளர் பொறுப்பினை கேட்பதற்கு எங்களுக்கு உரிமை இருக்கிறது. ஏனென்றால், நாங்களெல்லாம் காலம் காலமாக எம்.ஜி.ஆர். ரசிகர்களாக இருந்து வருகிறோம். கம்பளத்தார்கள் அதிகம் வசிக்கும் ஆண்டிபட்டி தொகுதியில்தான் முதலில் எம்.ஜி.ஆரும், அவர் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதாவும் போட்டியிட்டு வென்றார்கள். நீண்டகால விசுவாசிகளான கம்பளத்தார்களுக்கு, கட்சி, ஆட்சி, நிர்வாகம் என்று வரும்போது, சமுதாயத்திற்குரிய பங்களிப்பு இதுவரை கிட்டவில்லை.

viruthunagar admk

சுதந்திரத்திற்குப் பிறகு, தமிழக அரசியல் வரலாற்றில், இதுவரை எங்கள் சமுதாயத்தினர் எட்டு முறை மட்டுமே சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கடைசியாக, 2006-ஆம் ஆண்டு விருதுநகர் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் (ஆர்.வரதராஜன் – மதிமுக எம்.எல்.ஏ.) எங்கள் சமுதாயத்தின் கடைசி சட்டமன்ற உறுப்பினர் ஆவார். ஊராட்சி மன்றத்தலைவர், ஒன்றியக்குழு உறுப்பினர் அளவில் வெற்றி பெறும் எங்கள் சமுதாயத்தினருக்கு, மாவட்டக்குழு தலைவர், ஒன்றியப் பெருந்தலைவர், நகர்மன்றத் தலைவர், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் போன்ற பதவிகள் எட்டாக்கனியாகவே உள்ளன. கட்சியிலும்கூட, கிளைக்கழக செயலாளர்கள் என்பதைத் தவிர, ஒன்றிய, மாவட்ட அளவில், எங்கள் மக்கள் தொகை விகிதாச்சாரத்திற்கேற்ப பொறுப்புகள் வழங்கப்படுவதில்லை.

viruthunagar admk

மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் வம்சாவளியைசேர்ந்த ராதாகிருஷ்ணனுக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கிட வேண்டுமென, இராஜகம்பளத்தார் அதிமுக தலைமையிடம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், விருதுநகர் மாவட்ட அதிமுக சீனியர் ஒருவர், “அச்சமுதாயத்தினர் பரிந்துரைக்கும் ராதாகிருஷ்ணன், 40 ஆண்டுகளாக காங்கிரஸிலும், த.மா.கா.விலும் இருந்துவிட்டு 2018-ல் அதிமுக பக்கம் வந்தவர். கே.டி.ராஜேந்திரபாலாஜியை மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கி 50 நாட்களுக்கும் மேலாகிவிட்டது. கரோனா நெருக்கடியில் இருப்பதாலோ என்னவோ, புதிய மாவட்ட செயலாளர் என யாரும் நியமிக்கப்படவில்லை. ஆனாலும், மாவட்டம் முழுவதும் சுற்றிவந்து, தன் சொந்தப் பணத்தில் கரோனா நிவாரணமாக அரிசிப் பைகளை வழங்கி வருகிறார் கே.டி.ராஜேந்திரபாலாஜி. கட்சியில் என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை. மாவட்ட செயலாளர் ஆகவேண்டும் என்ற தவிப்பில் இந்த மாவட்டத்தில் சிலர் இருக்கிறார்கள். இவர்களுக்கு, எப்படியாவது மா.செ. பொறுப்பை வாங்கிவிட வேண்டும் என்ற துடிப்பு இருக்கிறதே தவிர, ஊரடங்கு பாதிப்பிலுள்ள மக்களுக்கு ஏதாவது நல்லது பண்ண வேண்டும் என்ற நினைப்பே இல்லை.” என்றார்.

அடுத்த மாவட்ட செயலாளர் யாரென்று அதிமுக தலைமை அறிவிக்கும் வரை, விண்ணப்பங்கள் அனுப்புவதும், விண்ணப்பிப்போர் விமர்சனத்துக்கு ஆளாவதும் ஓயப்போவது இல்லை.

viruthunagar admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe