‘உண்மையான உழைப்பெல்லாம் தனக்குச் சரிவராது’ என்பதில் தீர்மானமாக இருப்பவன் நிக்கோலஸ். அதற்காகவே, அன்னை தெரசா பெயரில் தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தினான். இத்தனைக்கும் இவன் மனைவி ஆசிரியையாக இருக்கிறார். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வளாகத்துக்கு அருகிலேயே வீடு இருப்பது இவனுக்கு வசதி யாகிப்போனது.
கலெக்டர் அலுவலகத்தில் வேலை பார்க்கிறேன் என்றும், அதிகாரிகள் அனைவரையும் தெரியும் என்றும் ‘பீலா’ விட்டு, அரசு வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி பணம் கறந்துவிடுவது இவனுக்குக் கைவந்த கலை. பண மோசடியோடு இவன் நின்றுவிடுவதில்லை. அரசு வேலைக்காக தன்னை அணுகும் அப்பாவிப் பெண்களை வலையில் வீழ்த்துவான். அப்படித்தான் விருதுநகர் மாவட்ட கிராமங்களில் உள்ள மகளிர் குழுக்களிடம் லட்சக்கணக்கில் கடன் வாங்கித் தருவதாகச் சொல்லி ஏமாற்றி யிருக்கிறான்.
‘கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் தெரிந்துவிடும்’ என்ற பழமொழி நிக்கோலஸ் விஷயத்திலும் பொருந்திப் போகிறது.
சிவகாசியை அடுத்துள்ள நாரணாபுரம் என்ற கிராமத்தில் உள்ள பெண்களிடமும் இவன் வாலாட்ட, ஒரு பெண் இவனைப் பின்னி எடுத்துவிட்டார். சட்டையைப் பிடித்து திட்டித் தீர்த்தார். வீதிகளிலும் ஓடஓட விரட்டுகிறார். பொதுஇடத்தில் இவன் அசிங்கப்பட்ட அந்த மொமொன்ட்டை செல்போனில் வீடியோவாக எடுத்த சிலர், வலைத்தளங்களில் பரப்பிவிட்டனர்.
நிக்கோலஸ் மீது விருதுநகர் மாவட்ட காவல் நிலையங்களில் பெண்களில் சிலர் புகார் அளித்தும் பெரிதாக நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று புலம்புகிறார்கள், நாரணாபுரம் மகளிர் குழுவினர்.