Skip to main content

விருத்தகிரீஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா... ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு! 

Published on 06/02/2022 | Edited on 06/02/2022

 

Viruthakriswarar Temple Crescent Festival ... Thousands of devotees participate!

தொண்டை மண்டலத்திற்கும், சோழ மண்டலத்திற்கும் இடையில் நடுநாட்டில் உள்ள விருத்தாச்சலம் எனப்படும் திருமுதுகுன்றத்தில் வீற்றிருக்கும் விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரரின் கோயில் சிறப்பான 1008 சிவதலங்களில் முதன்மையான நான்கில் ஒன்றாகும். சிவனின் தேவார பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 220- வது தேவாரத் திருத்தலமாக உள்ளது. 

 

இத்தலத்து ஈசனான முதுகுன்ற பெருமானை பாட மறுத்து சென்ற சுந்தரரை இறைவன் தடுத்தாட்கொண்டு பாட வைத்து பன்னீராயிரம் பொற்காசுகள் கொடுத்ததாகவும், அதனை எடுத்துச் செல்லும் போது களவு போய்விடும் என்பதால், மணிமுக்தா நதியில் அவற்றை போட்டு, திருவாரூர் கமலாலய குளத்தில் எடுத்துக்கொள் என்று ஈசன் அருள் கொடுத்ததாகவும் தல வரலாறு கூறுகிறது. 

Viruthakriswarar Temple Crescent Festival ... Thousands of devotees participate!

63 நாயன்மார்களில் முதன்மையானவர்களான அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வர், வள்ளாலார் இராமலிங்க சுவாமி, ஞானகூத்தர் போன்றவர்களால் பாடல் பெற்ற தலமான இக்கோயிலின் மற்றொரு சிறப்பு இங்கு 5 இறைவனின் திருநாமங்கள், 5 விநாயகர், 5 மூர்த்திகள், 5 கோபுரங்கள், 5 பிரகாரங்கள், 5 நந்திகள், 5 கொடி மரங்கள், 5 தேர்கள், 5 உள்மண்டபம், 5 வெளிமண்டபம், 5 வழிபாடுகள், இறைவனை தரிசனம் கண்ட 5 பேர் என ஐந்தின் சிறப்பாக அமைந்துள்ளன. இங்குள்ள ஆழத்து பிள்ளையார் கோவில் 18 அடி ஆழத்தில் உள்ளது.

 

விருத்தகிரீஸ்வரர் கோயில் உள்ள விருத்தாச்சலத்தில் பிறந்தால் முக்தி, வாழ்ந்தால் முக்தி, வழிபட்டால் முக்தி, நினைத்தால் முக்தி, இறந்தால் முக்தி என இவ்வைந்தில் ஒன்று நடந்தாலும் முக்தி நிச்சயம் என்பது ஜதீகம். “காசியை விட வீசம் பெரிசு விருத்தகாசி” என்ற புகழும் விருத்தகிரீஸ்வரருக்கு உள்ளது. அதாவது மணிமுக்தா நதியில் தலைமுழுகி விருத்தகிரீஸ்வரரை வணங்கினால் காசியில் கிடைக்கும் புண்ணியத்தை விட வீசம் அதிகமாக கிடைக்கும் என்பது ஐதீகம்.  

 

2000 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த விருத்தகிரீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் கடந்த 2002- ஆம் ஆண்டு நடைபெற்றது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோவில் குடமுழக்கு நடத்தப்பட வேண்டும். ஆனால், 2017- ஆம் ஆண்டுதான் குடமுழுக்கிற்கான திருப்பணிகள் தொடங்கியது. 5 ஆண்டுகளுக்கு மேலாக இப்பணி நடைபெற்று வந்தது. 

Viruthakriswarar Temple Crescent Festival ... Thousands of devotees participate!

22 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் திருப்பணிக்காக தமிழ்நாடு அரசு அறநிலையத்துறை மற்றும் உபயதாரர்கள் சார்பில் சுமார் 4 கோடி செலவிடப்பட்டு திருப்பணிகள் நடைபெற்றது. தொன்மங்களும், புகழும் பெற்ற விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில் மரபுகள் மாறாத நவீனமாக புணரமைக்கப்பட்டு 20 ஆண்டுகளுக்குப் பின்பு குடமுழுக்கு விழா இன்று (06/02/2022) வெகு விமரிசையாக நடைபெற்றது. 

 

குடமுழுக்கை முன்னிட்டு கடந்த பிப்ரவரி 27- ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கப்பட்டு, கோ பூஜை, அஸ்வ பூஜையுடன், ஆறுகால யாகசாலை உடன் கடம் புறப்பாடு நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் வேத மந்திர முழக்கத்துடன், மூலவர் விருத்தகிரீஸ்வரரின் கோபுர கலசம், விருத்தாம்பிகை கோபுர கலசம், 5 விமான கோபுர கலசம், ஆழத்து விநாயகர் கோபுர கலசம், முருகன், சண்டிகேஸ்வரர் மற்றும் 5 கொடிமரம் உட்பட அனைத்திற்கும் குடமுழுக்கு நன்னீராட்டு விழா நடைபெற்றது. மேலும் அனைத்து கோபுரங்களுக்கும், பக்தர்களுக்கும் ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது.

 

மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு விருத்தாச்சலம் நகரமே விழாக்கோலம் பூண்டது. கடலூர் மாவட்டம் மட்டுமல்லாது அண்டை மாவட்டங்களிலிருந்தும் 25 ஆயிரத்துக்கும் மேலான பக்தர்கள் கலந்து கொண்டு விருத்தகிரீஸ்வரர் ஆலய நன்னீராட்டு குடமுழுக்கை கண்டு பரவசமடைந்தனர். இதில் முக்கியமாக கோபுரக்கலசத்தில் நீர் ஊற்றும் போது 1000 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் மந்திரங்கள் ஒலித்தது.

Viruthakriswarar Temple Crescent Festival ... Thousands of devotees participate!

தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என தெய்வத் தமிழ்ப் பேரவையினர் வைத்த கோரிக்கையையடுத்து தமிழ் ஓதுவாளர்களைக் கொண்டு கோயில் கோபுரக் கலசத்தில் தமிழ் மொழி ஒலித்தது. சிதம்பரம் தெய்வத்தமிழ் பேரவை ஓதுவார்கள் பங்கேற்று திருமுறை பாடல்களை பாடினர். கலசத்தில் தமிழ் மந்திரங்கள் ஓதி திருநீராடிய போது 'தென்னாடுடைய சிவனே போற்றி!, 'எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி!' என்ற மந்திரம் வான் பிளக்க ஒலித்தது.

 

தமிழில் மந்திரங்கள் ஒலித்து குடமுழுக்கு நடைபெற்றது பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

 

 

சார்ந்த செய்திகள்