Skip to main content

“விருத்தகிரீசுவரர் கோவில் குடமுழுக்கை தமிழில் நடத்திட வேண்டும்”-தெய்வத்தமிழ்ப் பேரவை கோரிக்கை

Published on 31/01/2022 | Edited on 31/01/2022
dfsdsf

 

திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் (விருத்தகிரீசுவரர்) ஆலய திருக்குடமுழுக்கை தமிழில் மேற்கொள்ள தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெய்வத்தமிழ்ப் பேரவை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. 

 

இதுகுறித்து, 25.01.2022 அன்று தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை (விருத்தாசலம்) திருமுதுகுன்றம் (விருத்தகிரீசுவரர்) பழமலைநாதர் ஆலய செயலாளர் முத்துராஜாவிடம், தெய்வத்தமிழ்ப் பேரவையின் கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழ்த்திரு வே. சுப்ரமணியசிவா, தெய்வத்தமிழ்ப் பேரவையின் இணை ஒருங்கிணைப்பாளர் கி. வெங்கட்ராமன், பெண்ணாடம் தெய்வத்தமிழ்ப் பேரவையின் நிர்வாகிகள் தமிழ்த்திரு க.முருகன், தமிழ்த்திரு மா. மணிமாறன் ஆகியோர் நேரில் சந்தித்து மனு கொடுத்தனர். 

 

இம்மனுவில் பழமலை நாதர் (விருத்தகிரீசுவரர்) கோயில் திருக்குட முழுக்கில், வேள்விச் சாலை பூசை, கலச நீராடல், கருவறைப் பூசை தமிழில் நடைபெறுவதை உறுதி செய்யுமாறு தெய்வத்தமிழ்ப் பேரவை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. பிறகு 27.09.2022 அன்று கடலூரில் உள்ள இந்து அறநிலையத்துறை இணை ஆணையரிடம் கோரிக்கை மனு நேரில் அளிக்கப்பட்டது. இந்நிலையில் 29.01.2022 அன்று தெய்வத் தமிழ்ப் பேரவையினர் தமிழில் குடமுழுக்கு நடத்த ஏற்பாடுகள் எந்த நிலையில் உள்ளது எனத் தெரிந்துகொள்ள செயல் அலுவலர் முத்துரசாவை சந்தித்தனர். 

 

தமிழிலும் சமற்கிருதத்திலும் குடமுழுக்கு நடத்திட ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறோம். வேள்விச் சாலை அமைக்கும் பணியும், மங்கள வாத்தியங்கள் முழங்க மேடை அமைக்கும் பணியும் நடைபெற்று கொண்டிருக்கிறது என்று அவர் கூறினார். மேலும், பணி நடைபெறும் இடங்களைப் பார்வையிட அவரது உதவியாளரை அனுப்பி வைத்தார். 

 

தெய்வத்தமிழ்ப் பேரவை தலைமைச் செயற்குழு உறுப்பினர் முருகன்குடி முருகன், தெய்வத்தமிழ்ப் பேரவையின் பொறுப்பாளர்கள் தமிழ்த்திரு மா. மணிமாறன், தமிழ்த்திரு பி. வேல்முருகன், தி. சின்னமணி, மு. மணியரசன், இரா. அன்புமணி ஆகியோர் கலந்துகொண்டு பார்வையிட்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்