கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த விளாங்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுசாமி- செல்வி தம்பதியினரின் மகன் பெரியசாமி (27). இவர்களுக்கு மூன்று பெண்கள் உள்ளது. எட்டாம் வகுப்பு மட்டும் படித்திருக்கும் பெரியசாமி தந்தை இறந்த பின்பு சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இதேபோல் அதே கிராமத்தை சேர்ந்த கொளஞ்சி மகள் பப்லி(24) என்பவர் திருச்சியில் தனியார் வீட்டில் கூலி வேலை செய்து வந்துள்ளார். பெரியசாமிக்கும், பப்லிக்கும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவ்வப்போது இருவரும் தொலைபேசி மூலமாக பேசி வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பெரியசாமியும், பப்லியும் வீட்டை விட்டு ஓடிவிட்டனர். இந்நிலையில் பப்லியின் தந்தை கொளஞ்சி, பெரியசாமியின் தாயான செல்வியை விளாங்காட்டூர் கிராமத்தில் உள்ளநடுத்தெருவில் அமைந்துள்ள மின் கம்பத்தில் தன் மகளை மீட்டு தரக்கோரி கட்டிவைத்து அடித்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து தகவலறிந்த விருத்தாசலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து அவரை மீட்டுள்ளனர். இதில், படுகாயமடைந்த செல்வி விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து விருத்தாசலம் காவல் துறையினர் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.