Skip to main content

பட்டாசு ஆலையில் கோர வெடி விபத்து.. தொடரும் பலி எண்ணிக்கை.. விதி மீறல் காரணமா?

Published on 13/02/2021 | Edited on 13/02/2021

 

Viruhunagar crackers accident

 

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் பகுதியை அடுத்த ஏழாயிரம் பண்ணை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியிலிருக்கிறது அச்சங்குளம்.

 

இங்கே தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான, மாரியம்மாள் பட்டாசு உற்பத்தி ஆலை செயல்பட்டு வருகிறது. நாக்பூர் வெடிமருந்துக் கட்டுப்பாட்டுத் துறையினால் லைசென்ஸ் வழங்கப்பட்ட இந்த ஆலையில் ஆண்கள், பெண்கள் என்று 100க்கும் மேற்பட்டோர் சுற்றுப்புற கிராமப்பகுதியிலிருந்து வந்து வேலை செய்கின்றனர். அந்தப் பகுதியில் விவசாயம் என்பது மானாவரியாகிவிட்டபடியால், ஜீவாதாரம் பொருட்டு இதுபோன்ற பட்டாசு ஆலைகளில் தங்களின் உயிரைப் பணயம் வைத்து கூலி வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

‘நைட்ரேட் கந்தக’ வெடிக்கலவைகளைக் கொண்ட வாணவேடிக்கை நிகழ்த்துகிற ஃபேன்சி ரகப் பட்டாசுகளே இங்கு தயார் செய்யப்பட்டு வருகின்றன.

 

உச்சநீதிமன்ற உத்தரவிற்கிணங்க இங்கு உயிர் பயமற்ற பசுமை ரகப் பட்டாசு தயாரிக்கப்படுகிறதா? அல்லது வியாபார நோக்கில் கந்தகக் கலவையுள்ள தடைசெய்யப்பட்ட பட்டாசுகள் தயாரிப்பில் உள்ளனவா என்கிற அதிகாரிகளின் சோதனை எல்லாம் இரண்டாம் பட்சமே என்கிறார்கள் பகுதிவாசிகள். ஆனால், அவ்வப்போது பட்டாசு ரகங்கள் தயார் செய்யப்பட்டு ஆலையின் பொது வெளியில் குவிப்பதுண்டு.

 

தனித்தனி அறைகள் என சுமார் 40க்கும் மேற்பட்ட அறைகளைக்கொண்ட இந்த ஆலையின் சிறு சிறு அறைகளில் மருந்துக் கலவைகளைக்கொண்ட பட்டாசுகளை வழக்கம் போல் தயாரித்து வந்திருக்கிறார்கள். அவைகளை ஓரிடத்தில் குவித்து வைப்பதுண்டு.

 

அன்று பட்டாசு தயாரிப்பில் சுமார் 89 பேர் ஈடுபட்டிருந்தனர். தயாரித்தவைகளை ஓரிடத்தில் விதிமீறலாகக் குவியலாகக் குவித்து வைத்திருக்கிறார்கள். வெயில் உறைத்துக்கொண்டிருந்த நண்பகல் ஒன்றரை மணிவாக்கில் பட்டாசு ரகங்களைக் கையாளும்போது ஏற்பட்ட உராய்வில் திடீரென்று வெடித்ததில் பட்டாசுக் குவியல்கள் வெடித்து நாலா பக்கமும் சிதறிய நேரத்தில், ராக்கெட் வேகத்தில் பறந்த பட்டாசுகள் சுற்றியுள்ள 40 சிறு அறைகளிலும் பாய்ந்ததில் அங்குள்ளவையும் சேர்ந்தே வெடித்திருக்கின்றன.

 

இப்படி ஒரே சமயத்தில் வெடி வெடித்ததில் கட்டடங்கள் தரைமட்டமாயின. திரும்பும் இடமெல்லாம் புகைமண்டலங்கள், கதறல்கள். இதில் சிக்கிய 15 தொழிலாளிகள் ஸ்பாட்டில் பலியாகினர். மரண ஓலமெடுத்த நிலையில் தகவல் அறிந்து வெம்பக்கோட்டை, சாத்தூர், சிவகாசி பகுதிகளிலிருந்து ஸ்பாட்டுக்கு வந்த தீயணைப்பு படையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர். ரத்தமும் சதையுமாக சிதறிப் பலியான நிலையில் 30 பேர்கள் சதைகள் வெந்து, படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு சாத்தூர் மற்றும் விருதுநகர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டனர்.

 

அங்கே 2 பேர் மரணமடைய மொத்தப் பலி 17ஆக உயர்ந்தது. மாவட்டக் கலெக்டர் கண்ணன், மாவட்ட எஸ்.பி. பெருமாள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியை விரைவுபடுத்தினர். உரிய விசாரணை நடத்தப்பட்டு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஆட்சியர். அச்சங்குளம் கிராமத்தின் மரண ஓலங்கள் மனதைப் பிழிகின்றன.

 

virudhunagar crackers accident


அச்சங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சந்தனமாரி என்பவருக்குச் சொந்தமான மாரியம்மாள் பட்டாசு ஆலையை, விஜயகரிசல்குளம் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் மற்றும் அவரது உறவினர் என நான்கு பேர்கள் குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகின்றனர். இவர்களின் விதிமீறிய ஃபேன்சி ரக பட்டாசு தயாரிப்பின் காரணமாக இத்தனை பெரிய விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன.

 

பலியான 19 பேர்களில் போலீசார் விசாரணைக்குப் பின்பு அன்பின் நகரைச் சேர்ந்த சந்தியா (20), மார்க்கநாதபுரம் சின்னத்தம்பி (34) மேலப்புதூர் நேசமணி (38) கற்பகவள்ளி, ஒ.கோவில்பட்டி ரெங்கராஜ், சத்திரப்படி ரவிச்சந்திரன் போன்ற 6 பேர்களின் உடல்கள் மட்டுமே அடையாளம் காண முடிந்திருக்கிறது. மற்றவர்களின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவு கருகியும் சிதைந்தும் உள்ளன.

 

மேலும் முத்துக்குட்டி சண்முகவடிவு, புஸ்பம், சுப்புராஜ், சத்தீஸ்வரி, பாலசுப்பு, ஜெயா, தங்கலட்சுமி, வனராஜ், சங்கரேஸ்வரி, ஜெயராணி, கோபால் உள்ளிட்ட 28 பேர்கள் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில், சாத்தூர் அரசு மருத்துவமனையில் 19 பேரும், சிவகாசி மருத்துவமனையில் 7 பேரும், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 2 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் படுகாயம் அடைந்த 14 பேர் மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிசிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்றார் ஸ்பாட்டிலிருந்த கண்ணன்.

 

இதுகுறித்து, டி.ஐ.ஜி.யான ராஜேந்திரன் கூறுகையில், “வெடிவிபத்து தொடர்பாக ஆலையின் உரிமையாளர் சந்தனமாரி, குத்தகைதாரர் சக்திவேல் மற்றும் ஆலையின் ஃபோர்மேன் என்று மூவர் மீது ஏழாயிரம்பண்ணை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேல் விசாரணை நடப்பதுடன், இவர்களைப் பிடிப்பதற்கு 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன” என்றார்.

 

தவிர சிகிச்சையில் இருப்பவர்களுக்கு 60 சதவீதத்திற்கும் மேலாக தீக்காயங்கள் இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. தற்போதுவரை 19 பேர் பலியாகியும், 28 பேர் சிகிச்சையிலும் இருக்கிறார்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'ஒரே குடும்பத்தில் 90 பேர்'-வண்டி கட்டிக்கொண்டு வாக்களிக்க வந்த சம்பவம்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'90 people in the same family'-incident of carting and coming to vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் விருதுநகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 90 பேர் வண்டி கட்டிக் கொண்டு சென்று வாக்களித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பூசாரி நாயக்கன்பட்டி ஊரில் உள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 90க்கு மேற்பட்டோர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் கார்டுடன் வண்டி கட்டிக்கொண்டு வாக்களிக்க வந்தனர். விவசாயத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் 100 பேர் கொண்ட கூட்டுக் குடும்பத்தினர் வாக்களித்தனர்.

Next Story

விருதுநகர் தொகுதி; ஜனநாயகக் கடமையை நிறைவேற்றும் மக்கள் (படங்கள்)!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024

 

விருதுநகர் கூரைக்குண்டு, அரசு தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில்,விருதுநகர்  மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் இ.ஆ.ப.,  தனது வாக்கினைப்  பதிவு செய்தார்.

மல்லங்கிணர் அரசுத் தொடக்கப்பள்ளியில் அமைச்சர் தங்கம் தென்னரசு,தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். திருப்பரங்குன்றம் – திருநகரிலுள்ள சீதாலட்சுமி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வாக்களித்தார். திருத்தங்கல் கே.எம்.கே.ஏ.பள்ளியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வாக்களித்தார்.

விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியில் மொத்தம் 15,01,942 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 1689 மையங்களில் வாக்காளர்கள் வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்பாடு செய்யப்பட்ட சக்கர நாற்காலிகளில் மாற்றுத்திறனாளிகளும் முதியோரும் வாக்களித்துள்ளனர்.  இந்தத் தேர்தலில் 18 வயது நிரம்பிய வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள முதல் முறை, இளம் தலைமுறை வாக்காளர்கள்,  மூத்த வாக்காளர்கள், திருநங்கைகள், பெண்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்துத் தரப்பு வாக்காளர்களும் வாக்களித்து, தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி வருகின்றனர். 

விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி  வாக்குப் பதிவு  மதியம் 1.00 மணி நிலவரப்படி விருதுநகர்- 40.19%, திருப்பரங்குன்றம் - 39.33%, திருமங்கலம் - 41.70%, சாத்தூர் - 44.32%, சிவகாசி- 36.14%, அருப்புக்கோட்டை - 41.31%, என மொத்தம் - 40.45% வாக்குகள் பதிவாகியுள்ளது.