விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டம் சின்னக்காமன்பட்டி கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வந்தது. இந்த ஆலையில் நேற்று (01.07.2025) காலை சுமார் 08.30 மணியளவில் எதிர்பாராதவிதமாக  வெடி விபத்து ஏற்பட்டது. இதில் சிவகாசி வட்டம், மீனம்பட்டியைச் சேர்ந்த மகாலிங்கம் (வயது 55), அனுப்பன்குளத்தைச் சேர்ந்த செல்லப்பாண்டியன், மத்திய சேனையைச் சேர்ந்த லட்சுமி, ஒ. கோவில்பட்டியைச் சேர்ந்த ராமமூர்த்தி (வயது 38), புண்ணியமூர்த்தி, சேர்வைக்காரன்பட்டியைச் சேர்ந்த ராமஜெயம் (வயது 27), நாகபாண்டி மற்றும் சூலக்கரையை சேர்ந்த வைரமணி (வயது 32)  ஆகிய 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், இவ்விபத்தில் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் லிங்குசாமி (வயது 45), மணிகண்டன் (வயது 40), கருப்பசாமி (வயது 27), முருகலட்சுமி (வயது 48) மற்றும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அழகுராஜா (வயது 28) ஆகிய 5 பேரும் சிகிச்சை  பெற்று வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டார். அதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா நான்கு இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும், இலேசான காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டிருந்தார்.

மற்றொருபுறம் இந்த பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 4 பேரின் உடல்கள் இன்னும் விருதுநகர் அரசு மருத்துவமனையின் பிணவறையில் தான் வைக்கப்பட்டுள்ளது. அதே சமயம் தொடர்ச்சியாகப் போராட்டங்கள்  நடத்தப்பட்டு வருகிறது. கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும். பட்டாசு ஆலை நிர்வாகம் சார்பில் 10 லட்ச ரூபாய் கொடுக்க வேண்டும் என நேற்று முதல் தொடர்ச்சியாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களும், சமூக நல அமைப்புகளும் போராடி வருகின்றனர்.

அந்த வகையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இன்று (02.07.2025) சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர், அப்போது அவர்களை மிரட்டும் வகையில் விருதுநகர் மாவட்ட எஸ்.பி. கண்ணன் பேசிய பேச்சு தான் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், “ஒழுங்காக இருக்கணும். இல்லனா வேற மாதிரி ஆயிடும்”என்று பொதுமக்களை நோக்கி மிரட்டும் துணியில் எஸ்.பி. பேசியுள்ளார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள், “எங்களைச் சுட்டுக் கொல்லுங்கள்” எனப் பதிலடி கொடுத்தனர். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.