/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_562.jpg)
‘சுத்தம் சுகம் தரும்; சுகாதாரம் நாட்டைக் காக்கும்..’ என்ற வாசகம் இடம்பெறாத நகராட்சி அலுவலகமே தமிழகத்தில் இல்லை.ஏனென்றால், சுத்தத்தின் அவசியத்தை எடுத்துச் சொல்லி, மக்களைக் கடைப்பிடிக்கச் செய்து,நகரத்தின் சுகாதாரத்தைப் பேணுகிற பிரதான பணியை, நகராட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
இப்படியொரு புனிதமான சேவையில் ஈடுபட்டு வரும் நகராட்சி அலுவலகத்தில், அதன் ஊழியர் ஒருவர் அசுத்தமாக நடந்துகொண்டது, விருதுநகர் மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.
விருதுநகரைச் சேர்ந்த பெண் ஒருவர்,தனது மகளின் பிறப்புச் சான்றிதழில் திருத்தம் செய்வதற்காக, நேற்று (05 பிப்.) நகராட்சி அலுவலகத்துக்கு வந்தார். அங்கே, வெப்ப பரிசோதனை செய்யும் இடத்தில் அமர்ந்திருந்த வரித் தண்டலர் முனீஸ்வரன்,‘நான் திருத்தம் செய்து தருகிறேன்’ என்று அப்பெண்ணிடம் தகாத முறையில் பேசியதோடு, அழைக்கவும் செய்திருக்கிறார். குடிபோதையில் வேறு இருந்ததால், முனீஸ்வரனின் நடத்தை எல்லை மீறியிருக்கிறது.
புகாரென்று போனால் அவமானத்தைச் சந்திக்க நேரிடும் என்று பொறுமை காத்த அப்பெண், ஒருகட்டத்தில் ஆத்திரம் ஏற்பட்டு, முனீஸ்வரனைத் திட்டித் தீர்த்தார். வார்த்தைகளில் ஆவேசம் வெளிப்பட்டதால், இந்த விவகாரம் வெளியில் தெரிந்து, விருதுநகர் நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி வரை போனது. அப்பெண்ணிடம் புகாரைப் பெற்றுக்கொண்ட ஆணையர், முனீஸ்வரனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
அதே நேரத்தில், மகளின் பிறப்புச் சான்றிதழில் திருத்தம் செய்து,உடனடியாக அப்பெண்ணிடம் வழங்கப்பட்டது.
“பகல் வேளையில், அதுவும் நகராட்சி அலுவலகத்தில், பணி நேரத்தில் போதையில் இருந்ததோடு, பெண்ணிடமும் தகாதவாறு அரசு ஊழியர் ஒருவர் நடந்திருக்கிறார் என்றால், இதை இன்று மட்டுமே நடந்த தவறாக எப்படி எடுத்துக்கொள்ள முடியும்? இப்படி ஒரு குற்றச்செயலில் ஈடுபடும் தைரியம் அந்த ஊழியருக்கு எப்படி வந்தது? இதுபோன்ற கேள்விகளுக்கான பதிலை யாரிடம் பெறமுடியும்?” என்று கேட்கிறார்விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்த மாணிக்கவாசகம்.
மொத்தத்தில் ‘சிஸ்டம்’ சரியில்லை!
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)