“முதல்வர் கரிகாலன்... அமைச்சர் தங்கம் தென்னரசு வந்தியத்தேவன்...” - அரசு விழாவை கலகலப்பாக்கிய மருத்துவக் கல்லூரி டீன்! 

Virudhunagar medical college dean speech in government function

விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் மேகநாதரெட்டி தலைமையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தொழில்,முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டு மருத்துவச் சேவையினைத்தொடங்கி வைத்து, முடிவுற்ற புதிய கட்டடங்களைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் வரவேற்புரை ஆற்றிய விருதுநகர் மருத்துவக் கல்லூரி முதல்வர் சங்குமணி, விழாவிற்கு வந்திருந்த அமைச்சர்களைப் புகழ்ந்து தள்ளினார். இவர் நிகழ்த்திய வரவேற்புரையைக் கேட்டுஅமைச்சர்கள் மட்டுமல்லாது, அனைவரும் மகிழ்ந்தனர்.

முதலில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனை வரவேற்றபோது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ராமர் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியனை அனுமன் எனவும், அவருடைய நெஞ்சைப் பிளந்து பார்த்தால் முதலமைச்சர் இருப்பார் என்றும் பேசினார். அடுத்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனை வரவேற்றபோது, முதல்வர் ஸ்டாலின் மீது மிகுந்த விசுவாசம் கொண்டவர். அதனால்தான் அவருடைய இனிசியலில் இரண்டு கே மற்றும் இரண்டு எஸ் இருக்கிறது என்றார். ஒரு கே கலைஞர், ஒரு எஸ் ஸ்டாலின் எனப் பேசினார்.

அதனைத் தொடர்ந்து தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு குறித்துப் பேசும்போது, கூடுதல் உற்சாகத்துடன் முதலமைச்சரை கரிகாலன் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசுவை வந்தியத்தேவன் என்றும் வர்ணித்தார். இவருடைய பேச்சைக் கேட்ட மூன்று அமைச்சர்களும் சிரிப்பை அடக்க முடியாமல் தவித்ததோடு, ‘போதும் உங்கள் புகழாரம்..’ எனச் சிரித்தபடியே கேட்டுக்கொண்டனர். ஆனாலும், மருத்துவக் கல்லூரி முதல்வர் அதைக் காதில் வாங்காமல், தொடர்ந்து அதே ரீதியில் பேசியது, விழாவில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

Virudhunagar
இதையும் படியுங்கள்
Subscribe