virudhunagar gas incident.... Those who went to save were seriously injured!

ராஜபாளையம் மலையடிப்பட்டி ஏரியாவில், மன அழுத்தத்திலிருந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்வதற்கு முன், சமையல் எரிவாயுவைத் திறந்து வைத்துவிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டபோது, அவரைக் காப்பாற்றச் சென்ற இரு இளைஞர்கள், சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததால் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

ராஜபாளையம் சம்மந்தபுரத்தில் வசித்து வருபவர் கோபாலகிருஷ்ணன். தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் இவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களாக, மன அழுத்தம் காரணமாக மனைவியிடம் தகராறு செய்துவிட்டு, மதனிப்பட்டி பகுதியில் வசிக்கும் அவரது அக்கா முத்துமாரி வீட்டிற்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார்.

அக்கா முத்துமாரியும் அவரது கணவர் மாரிமுத்துவும் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், வழக்கம்போல் அக்கா வீட்டிற்கு வந்த கோபாலகிருஷ்ணன் அதிக மன அழுத்தத்திலிருந்துள்ளார். இதன் காரணமாக, தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்திலிருந்த அவர், அக்கா முத்துமாரி வீட்டிலிருந்த சமையல் எரிவாயுவைத் திறந்துவிட்டு, தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதனால், சமையல் எரிவாயு வாசம் வீதி முழுவதும் பரவியிருக்கிறது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள், அந்த வீட்டுக்குள் பார்த்தபோது, கோபாலகிருஷ்ணன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்திருக்கிறது.

Advertisment

virudhunagar gas incident.... Those who went to save were seriously injured!

உடனடியாக அவரைக் காப்பாற்றும் நோக்கத்தில், கருப்பசாமி, ராமசுப்பு ஆகிய இருவரும் உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்த கதவினை இயந்திரம் கொண்டு அறுக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது, அதிலிருந்து கிளம்பிய நெருப்பு கசிந்து கொண்டிருந்த சமையல் எரிவாயு மீது பட்டு, வெடித்துச் சிதறி தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சமையல் எரிவாயுமீது நெருப்பு பட்டதில் தூக்கி வீசப்பட்ட கருப்பசாமி மற்றும் ராமசுப்புவை அக்கம் பக்கத்தினர் மீட்டு, ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, ராஜபாளையம் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தின்போது, உடலில் 50 சதவீத தீக்காயங்களுடன் வீட்டிலிருந்து வெளியே வந்த கோபாலகிருஷணன், யாரும் எதிர்பாராத வகையில், அருகிலிருந்த அவர் தங்கை வீட்டுக்குள் சென்று கதவைத் தாழிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சமையல் எரிவாயு வெடித்துச் சிதறியதில் பரவிய நெருப்பை அணைக்க வந்த தீயணைப்புத் துறையினர், இது குறித்து ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, கோபாலகிருஷ்ணன் உடலை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.