Advertisment

பட்டாசு தொழிற்சாலையில் முதல்வர் ஆய்வு!

virudhunagar factory cm MK Stalin inspection

Advertisment

விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்றும் (09.11.2024), நாளையும் (10.11.2024) கலந்துகொள்கிறார். இதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகை தந்தபோது விருதுநகரில் உள்ள தனியார் பட்டாசு தொழிற்சாலையைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது தொழிற்சாலை பெற்றுள்ள உரிமச் சான்றினை ஆய்வு செய்தார். அங்குப் பட்டாசுகள் தயாரிப்பதற்கான இரசாயனப் பொருட்கள் வைப்பறை, தயாரிக்கப்படும் இடங்கள், பட்டாசுகள் வைப்பறை, மைக்ரோ கார்டு திரி வைப்பறை போன்ற இடங்களைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

சுமார் 80 பேர் பணிபுரியும் இத்தொழிற்சாலையில், 36 பெண்கள் பணியாற்றிவரும் நிலையில், அவர்களிடம் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கிறதா என்பதைக் கேட்டறிந்தார். இப்பட்டாசு தொழிற்சாலை இதுவரையில் விபத்து ஏற்படாமல் மிகுந்த பாதுகாப்புடன் செயல்பட்டுவருவதைக் கேட்டறிந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனைத்து தொழிற்சாலைகளிலும் பசுமையான சூழலைப் பராமரிக்கவும், பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகளை மேலும் வலுப்படுத்தவும் அறிவுறுத்தினார்.

மேலும், இந்நிறுவனத்தின் உரிமையாளரிடம் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவருக்கும் பாதுகாப்பிற்கான முறையான காப்பீடு வசதியினை செய்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தியதோடு, தொழிலாளர்களிடம் அவர்களது கோரிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது, அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, சி.வி. கணேசன், சட்டமன்ற உறுப்பினர் எ.ஆர்.ஆர். சீனிவாசன், மாவட்ட ஆட்சித் தலைவர் வீ.ப. ஜெயசீலன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர். அதன் பின்னர் இத்தொழிற்சாலைக்கு வெளியே திரளாகக் கூடியிருந்த பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெற்றுக் கொண்டார்.

Inspector Virudhunagar
இதையும் படியுங்கள்
Subscribe