
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள மம்சாபுரத்தில் இருந்து ஸ்ரீவில்லிப்புத்தூர் நோக்கி இன்று (27.09.2024) காலை 08.30 மணியளவில் சிற்றுந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமான பயணிகள் பயணித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் உள்ள இடதுபுறத்தில் தலைகீழாகக் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சிக்கி சதீஷ்குமார், நிதீஷ் குமார், ஸ்ரீதரன் மற்றும் வாசுதேவன் உள்ளிட்ட நான்கு மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதில் இறந்தவர்களில் மூன்று பேர் பள்ளி மாணவர்கள் என்று முதற்கட்டமாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த பேருந்தில் இருந்த 15க்கும் மேற்பட்டோர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று விடு திரும்பி உள்ளனர். அதேசமயம் பள்ளி மாணவி உட்பட இருவர் மேல் சிகிச்சைக்காக சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தைக் கண்டித்து அப்பகுதி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அப்போது போலீசார் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர்.
அச்சமயத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள், “இங்குள்ள சாலையை அகலப்படுத்த வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்களின் வசதிக்காகக் கூடுதல் அரசு பேருந்து இயக்க வேண்டும். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நேரில் விரைந்து வந்து உறுதியளிக்க வேண்டும்” என வலியுறுத்தி வருகின்றனர். சிற்றுந்து கவிழ்ந்த விபத்தில் நான்கு மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.