Skip to main content

“நான் கரோனா இல்லீங்க..”- இளைஞரை நோகடித்த வாட்ஸ்- அப் வதந்தி!

Published on 24/03/2020 | Edited on 24/03/2020

விருதுநகர் மாவட்டத்தில் சமீபத்தில் வெளிநாடு சென்று திரும்பியவர்களின் வீடுகளில் ‘கரோனா தொற்று! உள்ளே நுழையாதே! தனிமைப்படுத்தப்பட்ட வீடு!’ என ஸ்டிக்கர் ஒட்டியுள்ளனர். சுகாதாரத்துறையின் கண்காணிப்பில் இவ்வீட்டில் உள்ளவர்கள், சுய தனிமைப்படுத்துதலை மேற்கொள்ள வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 

தமிழகம் முழுவதும் எடுக்கப்பட்டுள்ள இந்த அவசரகால நடவடிக்கையைத் திரித்து, வாட்ஸ்- அப் தகவல் மூலம் வதந்திகளாக சிவகாசி மற்றும் திருத்தங்கல் பகுதிகளில் சிலர் பரப்பி வருகின்றனர். அதனால், “சிவகாசியில் அந்த ஏரியா பக்கம் போகாதீங்க.. திருத்தங்கல்லில் இந்த ஏரியா பக்கம் போகாதீங்க..”என்று தெருக்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, அங்குச் சென்றால் கரோனா தொற்றிக்கொள்ளும் என்று பேச ஆரம்பித்துள்ளனர். 

virudhunagar district  youngster coronavirus whatsapp

இத்தகைய பொறுப்பற்ற பேச்சுக்களின் விளைவாகப் பாதிக்கப்பட்டுள்ள தர்மராஜ் என்பவர் நம்மிடம் பேசினார். “நான் தாய்லாந்து போயிட்டு வந்து 45 நாள் ஆகுது. எனக்கு இருமலோ, காய்ச்சலோ எதுவும் இல்ல. நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கேன். ஆனாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு அதிகாரிகள் எங்க வீட்ல வந்து கரோனா ஸ்டிக்கர் ஒட்டிட்டு போயிட்டாங்க. இதை யாரோ போட்டோ பிடிச்சு, எனக்கு கரோனான்னு,   என்னோட செல்போன் நம்பர் இருக்கிற அந்த ஸ்டிக்கரையும் வாட்ஸ்- அப்ல போட்டு கன்னாபின்னான்னு வதந்தி கிளப்பிட்டாங்க. இப்ப பாருங்க.. சென்னை, டெல்லில இருந்தெல்லாம் போன் பண்ணி,‘உனக்கு கரோனாவாம்ல.. ஏன் வீட்ல இருக்க? உடனே ஜி.எச்.சுக்கு போ’ன்னு ஆளாளுக்கு விரட்டுறாங்க. அதுல ஒருத்தர்‘கரோனாவா பேசுறது?’ன்னு கேட்டாரு.‘அய்யா நான் கரோனா இல்ல.. என் பேரு தர்மராஜ்.. எனக்கு கொரோனா எதுவும் இல்லை’ன்னு சொன்னேன். அதுக்கு அவரு‘தம்பி, பொய் சொல்லாதீங்க.. உங்க நோய் உங்களோட போகட்டும். யாருக்கும் பரப்பாதீங்க’ன்னு அட்வைஸ் வேற பண்ணுனாரு. அக்கம் பக்கத்துலயும் தள்ளி நின்னு ஒருமாதிரி பார்க்கிறாங்க. என்னத்தச் சொல்ல? ஒவ்வொருத்தர்கிட்டயும் என்னோட நிலைமைய விளக்குறதுக்கே நேரம் சரியா இருக்கு. என்னோட பிரச்சனைய நக்கீரன்ல போடுங்க சார்.”என்றார் வேதனையுடன். 

virudhunagar district  youngster coronavirus whatsapp

சிவகாசியில், மேலும் மூன்று வீடுகளில்‘கரோனா தொற்று’ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ள நிலையில், வாட்ஸ்- அப் வதந்தியால், அங்கு வசிப்பவர்களும், தர்மராஜ் போலவே சங்கடத்துக்கு ஆளாகி வருகின்றனர். 
 

வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களை அடையாளம் காண்பது நல்லதொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான்! அதனை, கரோனா அச்சத்தில் மக்கள் தவிக்கின்ற நேரத்தில், தவறான கண்ணோட்டத்தோடு சிலர் பார்ப்பதும், வதந்தி பரப்புவதும், பொறுப்பற்ற செயல் ஆகும். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“இதை செய்ய சொன்னால் இந்தியாவை விட்டு வெளியேறுவோம்” - வாட்ஸ் அப் எச்சரிக்கை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 WhatsApp warning May have to leave India

உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் உபயோகிக்கும் செயலி தான் வாட்ஸ் அப். இந்த செயலி மூலம், தகவல்களை பரிமாறவும், இணைய சேவை மூலம் எந்தவித கட்டணமுமின்றி வீடியோ கால், ஆடியோ கால் போன்றவற்றை பயன்படுத்தவும் முடியும். மேலும், புகைப்படங்கள், வீடியோக்கள், ஸ்டிக்கர்கள் என அனைத்து விதமான பரிமாற்றங்களையும் இந்த செயலி மூலம் அனுப்பக்கூடிய வசதிகள் உண்டு. இந்த செயலியை உபயோகிக்காத மக்கள் மிகவும் சொற்பமாக தான் இருக்க முடியும் என்றுதான் கூற வேண்டும். 

இதற்கிடையில் வாட்ஸ் அப் பயனர்களின் வசதிகளுக்கு ஏற்றவாறு வாட்ஸ் அப் நிறுவனம் அவ்வப்போது புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்த செயலி மூலம் பயனர் ஒருவருக்கு அனுப்பும் செய்திகளை மூன்றாம் நபர்கள் பார்க்க முடியாதவாறு எண்டு டு எண்டு என்கிரிப்ஷன் ( End to End Encryption) முறையை கொண்டு வந்தது. இதனைப் பயன்படுத்தி பயனர்கள், தாங்கள் அனுப்பும் செய்திகளை பாதுகாத்து கொள்ளலாம். இதனால், தனிப்பட்ட ஒருவரின் செய்திகள் பாதுகாக்கப்படும் என்று கூறப்படுகிறது. 

இந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப சட்டங்களில் மத்திய அரசு புதிய மாற்றத்தை கொண்டு வந்தது. மத்திய அரசு கொண்டு வந்த அந்த சட்டத்தில் கூறியதாவது, போலி செய்திகளையும், நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் தவறான செய்தி பகிர்வுகளை கண்டறிய வேண்டும். இதனால், வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற செய்தி பகிர்வு செயலி வாயிலாக பகிரப்படும் அனைத்து செய்திகளும் சேமிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டது.

இதனை எதிர்த்து வாட்ஸ் அப், பேஸ் புக் ஆகிய நிறுவனங்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பான வழக்கு நேற்று (25-04-24) டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், ‘வாட்ஸ் அப் எண்டு டு எண்ட் என்கிரிப்ஷன் காரணமாக போலி செய்திகளை கண்டறிவதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும், இது போலி செய்திகளால் நாட்டில் நிலவும் அமைதி மற்றும் ஒற்றுமையை சீர்குலைத்துவிடும்’ என வாதிட்டார். 

இதனையடுத்து, வாட்ஸ் அப் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தேஜஸ் காரியா, “இந்த சட்டத்தை அமல்படுத்துவதால் நாங்கள் ஒரு முழுமையான சங்கிலியை வைத்திருக்க வேண்டும். மேலும், மில்லியன் கணக்கான செய்திகளை பல ஆண்டுகளாக சேமிக்க வேண்டும் நிலை உருவாகும். உலகில் எந்த நாட்டிலும் இது போன்ற சட்டங்கள் இல்லை.  இது போன்ற சட்டங்களை கொண்டு வந்து  என்கிரிப்ஷனை எடுக்க சொன்னால் வாட்ஸ்அப் இந்தியாவை விட்டு செல்ல வேண்டி இருக்கும்” எனத் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், இது தொடர்பான வழக்கை ஒத்திவைத்தனர். 

Next Story

நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Judgment postponed in Nirmala Devi case

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாகக் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்காக மாணவிகளிடம் பேரம் பேசியதாக கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது. மேலும் இந்த விவகாரத்தில் அவருக்கு உதவியதாக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதன்பின்னர் முருகன், கருப்பசாமி ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி இருந்தது.

இத்தகைய சூழலில் ஸ்ரீவில்லிப்புத்தூர் மகிளா நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்துவந்தது. இதனையடுத்து இந்த வழக்கில் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையொட்டி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அதே சமயம் நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

உடல்நலக்குறைவால் நிர்மலா தேவி ஆஜராக முடியவில்லை என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி பகவதி அம்மாள், “நிர்மலா தேவி 29 ஆம் தேதி கட்டாயம் ஆஜராக வேண்டும். இந்த வழக்கில் 29 ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும்” எனத் தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தார்.