கணவனில்லாத பெண்களைக் குறிவைக்கும் நபர்கள்!- அதிரவைக்கும் குழந்தை விற்பனைச் சந்தையின் பின்னணி!

virudhunagar district womens and childrens details

பெற்றால்தான் பிள்ளையா என்ற பரந்த மனப்பான்மையுடன், குழந்தை இல்லாத தம்பதியர், தங்களுக்கென ஒரு குழந்தை வேண்டுமென்று தத்தெடுக்கின்றனர். இவ்வாறு தத்தெடுப்பதற்கு சட்டம் அனுமதிக்கிறது. ஆனால், சட்ட விதிகளுக்குப் புறம்பாக, குறுக்கு வழியில் குழந்தைகளைத் தத்தெடுப்பது பரவலாக நடக்கிறது. சரி, விருதுநகர் விவகாரம் என்னவென்று பார்ப்போம்!

ஒரு வயதுப் பெண் குழந்தையை ரூபாய் 2.30 லட்சத்துக்கு விற்ற தாய் உள்ளிட்ட 9 பேரை விருதுநகர், சூலக்கரை காவல்நிலைய போலீசார் கைது செய்துள்ளனர்.

கணவனை இழந்த செவல்பட்டியைச் சேர்ந்த கலைச்செல்வியின் குழந்தை மாயமானதைத் தொடர்ந்து, பக்கத்தில் வசிப்பவர்கள் சந்தேகமடைந்து, சைல்ட் லைனைத் தொடர்புக் கொண்டனர். சூலக்கரை காவல்நிலையத்தில் வழக்கு பதிவாகி, இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், குழந்தையின் தாய் கலைச்செல்வி, குழந்தையை விலைக்கு வாங்கிய மதுரையைச் சேர்ந்த தம்பதியர் கருப்பசாமி, பிரியா, பிரியாவின் தந்தை கருப்பசாமி, குழந்தையை விலைக்கு வாங்கி விற்ற மகேஸ்வரி, மாரியம்மாள், உடந்தையாக இருந்த கார் டிரைவர்கள் கார்த்திக், செண்பகராஜன் மற்றும் புரோக்கர் நந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன் பின்னணி குறித்து விசாரித்தபோது, குழந்தை விற்பனைச் சந்தையாக, கோவை, திருப்பூர், மதுரை பகுதிகளில் ஒரு பெரிய நெட்வொர்க் செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது. இந்தக் கும்பலின் கைகளுக்கு குழந்தைகள் எப்படி கிடைக்கிறது தெரியுமா?

virudhunagar district womens and childrens details

திருமண புரோக்கர்களாகத் தங்களைக் காட்டிக்கொண்டு, இந்த மோசடி கும்பல் தேடி அலைவது, திருமணமாகி கணவனை இழந்து, கைக்குழந்தையுடன் பரிதவிக்கும் பெண்களைத்தான். இவர்களின் குறி குழந்தைகளே. இதுபோன்ற பெண்களை இந்த நெட்வொர்க் எப்படி அணுகுமென்றால், “இந்தச் சின்ன வயசுல புருஷன் இல்லாம, கைக்குழந்தைய வேற வச்சிக்கிட்டு, நீ என்னென்ன கஷ்டப்படறன்னு பார்த்தாலே தெரியுது. நாங்களே உனக்கு நல்ல மாப்பிள்ளையா பார்த்து கல்யாணம் பண்ணிவைக்கிறோம்.” என்று தூண்டில்போட்டு, இதற்கென்றே தயார் செய்துவைத்திருக்கும் மாப்பிள்ளையைக் கூட்டிவந்து, அந்தப் பெண்ணுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்கின்றனர். அதன்பிறகு, “இப்ப புதுசா கல்யாணம் பண்ணிருக்க. இந்த நேரத்துல முதல் புருஷனுக்கு பிறந்த குழந்தை உன்கிட்ட இருக்கிறது நல்லாவா இருக்கு?” என்று நைச்சியமாகப் பேசி, ஒரு தொகையும் தந்து தாயின் சம்மதத்துடன் குழந்தையை விலைக்கு வாங்கி விடுகிறார்கள். ஏற்கனவே, குழந்தை வேண்டுமென்று தங்களிடம் கேட்டிருந்த குழந்தையில்லாத தம்பதியருக்கு, பெரிய அளவில் விலைபேசி, அந்தக் குழந்தையை விற்றுவிடுகின்றனர்.

இப்படித்தான் கலைச்செல்விக்கு 6 மாதங்களுக்குமுன் இரண்டாவது திருமணம் நடத்தி வைத்துள்ளனர். குழந்தைக்கு விலைபேசி, போலி திருமண புரோக்கர்கள் வாங்கியதும், அந்த புதுமாப்பிள்ளை கலைச்செல்வியை விட்டுவிட்டு, எங்கோ போய்விட்டான். இந்த நிலையில்தான், சம்பந்தப்பட்ட கலைச்செல்வி உள்ளிட்ட 9 பேரும் காவல்துறையின் பிடியில் சிக்கியிருக்கின்றனர்.

எந்தெந்த வழியிலெல்லாமோ மோசடிகள் நடக்கின்றன. கணவன் இல்லாத ஆதரவற்ற பெண்கள் உஷாராக இருக்கவேண்டும்.

police Virudhunagar
இதையும் படியுங்கள்
Subscribe