ADVERTISEMENT

“இனி குழந்தைகள் வன்கொடுமை தமிழகத்தில் நடக்காது!”- வழிமறித்த மக்களிடம் அமைச்சர் திட்டவட்டம்!

12:22 PM Jan 23, 2020 | santhoshb@nakk…

போக்சோ சட்டம், குழந்தைகள் பாலியல் வீடியோ மற்றும் போட்டோக்களை இணையத்தில் பார்த்தாலோ, செல்போனில் வைத்திருந்தாலோ கைது நடவடிக்கை என, குழந்தைகள் பாதுகாப்பு விஷயத்தில், சட்டத்தின் மூலம் கெடுபிடிகள் கடுமையாக இருந்தும், குழந்தைகள் தொடர்பான குற்றச் சம்பவங்கள் குறைந்தபாடில்லை.

ADVERTISEMENT

சிவகாசியில் கடந்த 2015- ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 30- ஆம் தேதி, விளையாடிக்கொண்டிருந்த 8 மற்றும் 9 வயதுச் சிறுமிகள் இருவரைத் தன் வீட்டுக்கே அழைத்துச் சென்று பலாத்காரம் செய்தான் குழந்தைராஜ். ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கில், இயற்கை மரணம் அடையும் வரையில் குழந்தைராஜுவை சிறையிலடைப்பதற்கு உத்தரவிட்டுள்ளார் நீதிபதி பரிமளா.

ADVERTISEMENT

கடந்த ஜனவரி 20-ஆம் தேதி, அதே சிவகாசியில், தன் வீட்டில் கழிப்பறை வசதியில்லாததால், ஒதுங்குவதற்காக முட்புதர் பக்கம் சென்றாள், மூன்றாம் வகுப்பு மாணவியான அச்சிறுமி. பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில், மறுநாள் சடலமாகத்தான் மீட்கப்பட்டாள்.

சிவகாசி பகுதியில் தொடர்ந்து குழந்தைகள் குறி வைக்கப்படுவதற்கான காரணத்தைச் சொன்னார், ஆனையூர் பகுதியில் வசிக்கும் அந்த சமூக ஆர்வலர். “குறிப்பாக சிவகாசியில் எங்கு பார்த்தாலும் கஞ்சா விற்கிறார்கள். இங்கே இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகில், கஞ்சா புகைப்பவர்களின் நடமாட்டம் அதிகம் இருக்கிறது. எந்நேரமும் கஞ்சா போதையிலேயே இருக்கும் இரண்டு இளைஞர்கள் சிறுமிகளைத் தூக்கிச் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அவர்களால் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போக, ஒருகட்டத்தில் மக்களே அவர்களைத் தேடிபிடித்து அடித்து உதைத்தார்கள். காவல் நிலையம் வரை விவகாரம் சென்றது. அப்போது விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த ராஜராஜனிடம் இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்டது. அப்போதே, இருவர் மீதும் மிகக்கடுமையாக நடவடிக்கை எடுத்திருந்தால், இதுபோன்ற கொடுமைகள் தொடர்ந்திருக்காது. சிவகாசி - கொங்கலாபுரத்தில் சிறுமியைக் கொலை செய்தவர்களும் அந்த ரகமாகத்தான் இருப்பார்கள்.” என்றார்.

விருதுநகர் மாவட்ட எஸ்.பி.பெருமாள் ஆலோசனைப்படி, சிவகாசி டி.எஸ்.பி.பிரபாகரன் தலைமையில் ஐந்து தனிப்படை அமைக்கப்பட்டு சந்தேகத்திற்குரிய நபர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், அந்தச் சிறுமி வீட்டுக்குச் சென்று ஆறுதல் கூறி நிதியளித்துவிட்டு திரும்பிய அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை அங்கிருந்து செல்லவிடாமல், அந்த ஏரியாவாசிகள் மறித்தார்கள். அப்போது, பொதுமக்கள் காரசாரமாக கேள்விகளை வீச, அமைச்சரும் உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.

“இது உங்களின் தனிப்பட்ட பிரச்சனை அல்ல. தமிழகத்தின் பிரச்சனை. தமிழகத்தில் சிறுமிகளுக்கு துயரம் நேர்வது இதுவே கடைசியாக இருக்கும். தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை இனி நடைபெறாத அளவுக்கு இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த மாவட்டத்தில் வட மாநிலத்தவர் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பும் நடந்து வருகிறது.” என்றார்.


“போலீசார் என்கவுன்டரை விரும்பிச் செய்வதில்லை“ என்று கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினாலும், இந்த விவகாரத்தில் தனது தொகுதி மக்களிடம் அவர் அளித்த உறுதிமொழி ‘குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரை ‘என்கவுன்டர்’ செய்வதே சரியாக இருக்கும். உயிருக்குப் பயந்தாவது கெட்ட எண்ணத்தோடு குழந்தைகளை யாரும் நெருங்க மாட்டார்கள்.’என்பதை சூசகமாகத் தெரிவிப்பதுபோல் இருந்தது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT