Skip to main content

பட்டாசு ஆலை விபத்தில் இருவர் பலி! சிறுவனைத் தேடும் உறவினர்கள்!

Published on 19/02/2020 | Edited on 19/02/2020

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம்- சின்னகாமன்பட்டியில்  பிரபாகரன் என்பவர், சூரிய பிரபா என்ற பெயரில் பட்டாசுத் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இன்று வழக்கம்போல் இத்தொழிற்சாலையில் பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வாகனம் ஒன்றில் பட்டாசு ஏற்றும்போது உராய்வு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக வெடி விபத்து ஏற்பட்டதாகக் கூறுகின்றனர். 
 

இந்த வெடி விபத்தில், பட்டாசுத் தொழிற்சாலையின் அனைத்து அறைகளுக்கும் மளமளவென்று தீ பரவியதால், அந்த ஆலையின் சில கட்டிடங்கள் வெடித்துச் சிதறின. மூன்று அறைகள் தரைமட்டமானது. அங்கு பணியாற்றிய இருவர் பலியானார்கள். படுகாயமுற்ற 6 பேர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

virudhunagar district crackers plant incident police investigation

தகவலறிந்து விரைந்த சாத்தூர் வெம்பக்கோட்டை தீயணைப்புத் துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளிலில் ஈடுபட்டனர். இவ்விபத்து குறித்து சாத்தூர் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.  
 

விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் உரிமம் பெற்று இயங்கும் சூரிய பிரபா பட்டாசுத் தொழிற்சாலை, விதிமீறலாக ஃபேன்சி ரக பட்டாசுகளைத் தயாரித்து வந்ததாகவும், விதிகளுக்கு முரணாக அதிக அளவில் ஊழியர்களை ஈடுபடுத்தியதாகவும், அத்தொழிற்சாலையின் உரிமையாளர் பிரபாகரன் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 


மேலும், 10-வது வகுப்பில் படிப்பைத் தொடராமல் பட்டாசு வேலைக்குச் சென்ற மீனம்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் என்ற சிறுவனை, விபத்து நடந்த இடத்தில் உறவினர்கள் தேடி வருகின்றனர். அபாயகரமான தொழில் பட்டியலில் உள்ள பட்டாசுத் தொழிலில் சிறுவர்களை ஈடுபடுத்துவது சட்ட விரோதமான செயலாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டாசுகள் வெடித்து வீடு தரைமட்டம்; தயாரித்தவர் உடல் சிதறி உயிரிழப்பு

Published on 05/03/2024 | Edited on 05/03/2024

 

வெடிமருந்தும், பட்டாசுகளும் சேர்ந்து பயங்கரமாக வெடித்ததில் வீடு தரைமட்டமானதுடன் தயாரித்த தொழிலாளியும் உடல் சிதறி பலியான சம்பவம் விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தின் சிவகாசி பகுதியிலுள்ள திருத்தங்கல் நகர் பகுதியைச் சேர்ந்த சத்திஸ்வரன். இவர் சிவகாசியின் பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வந்தவர். இவரது மனைவி ராமலட்சுமி. தம்பதியருக்கு மூன்று பிள்ளைகள். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் தான் சத்திஸ்வரன் தன் குடும்பத்துடன் தனது மனைவியின் சொந்த ஊரான தென்காசி மாவட்டத்தின் திருவேங்கடம் வட்டத்திற்குட்பட்ட கொக்குகுளம் கிராமத்தில் குடியேறியிருக்கிறார். அங்கிருந்தபடியே சிவகாசி பட்டாசு ஆலைக்குச் சென்று வேலை பார்த்து வந்தார். பின்னாளில் பேன்சி ரக பட்டாசுகள் தயாரிப்பதற்கான வெடி மருந்துகள் உள்ளிட்ட மூலப்பொருட்களை மொத்தமாக வாங்கி வந்து தன் மாமனாருக்குச் சொந்தமான மற்றொரு வீட்டில் வைத்து ரகசியமாக பேன்சி பட்டாசுகளைத் தயார் செய்து விற்பனை செய்து வந்திருக்கிறார்.

சத்திஸ்வரன் பட்டாசுகள் தயாரிக்க, வெடி பொருட்களை சேமித்து வைக்க, விற்பதற்கு, வாங்குவதற்கு அவைகளுக்கான அனுமதியும் பெறவில்லை என்கிறார்கள் கிராமத்தினர்.

இந்த நிலையில், நேற்று காலை நேரம் அந்த வீட்டில் சத்திஸ்வரன் பட்டாசுகள் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தார். அது சமயம் எதிர்பாராத வகையில் திடீரென தயாரிப்பு மருந்து கலவைகளில் உராய்வு ஏற்பட்டு பயங்கர சத்தத்துடன் வெடிமருந்து கலவையும் இருப்பு வைத்திருந்த பட்டாசுகளும் மொத்தமாய் வெடித்துச் சிதறின. இதில் அந்த வீடு அடியோடு இடிந்து தரைமட்டமானது. தயாரிப்பிலிருந்த சத்திஸ்வரன் உடல் வேறு கைகள் வேறாய் சிதறிய நிலையில் சம்பவ இடத்திலேயே பலியாகி இருக்கிறார். அது போக இந்த வெடி விபத்தின் தாக்கத்தால் அருகிலுள்ள 100 மீட்டர் தொலைவிற்கு உட்பட்ட பகுதிகளில் இருந்த வீடுகளும் அதிர்ந்து விரிசல் கண்டுள்ளன. அதுசமயம் வீட்டினருகே நின்று கொண்டிருந்த அவரது மனைவி ராமலட்சுமியும் படுகாயமடைந்தார். தகவலறிந்த மாவட்ட எஸ்.பி.யான சுரேஷ்குமார், ஆட்சியர் கமல்கிஷோர், கோட்டாட்சியர் கவிதா உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து வந்து சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

Next Story

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து; முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

Published on 15/12/2023 | Edited on 15/12/2023
Sathur Fireworks Factory Blast; Chief Minister Relief Notice

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

விருதுநகர் மற்றும் சிவகாசி பகுதிகளில் அவ்வப்போது பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து சம்பவங்களும் அதில் உயிரிழப்புகள் ஏற்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. அண்மையில் இதுபோன்ற பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்திருந்த நிலையில், தற்போது விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பனையப்பட்டி என்ற பகுதியில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மருந்து கலக்கும் போது ஏற்பட்ட இந்த விபத்தில், கண்டியாபுரத்தைச் சேர்ந்த சண்முகராஜ் (36) என்பவர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.  இந்நிலையில், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்த சண்முகராஜ் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.