
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தாலுக்காவிற்கு உட்பட்ட அச்சங்குளம் கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளர்கள் உள்பட 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலத்த காயமடைந்த 34 பேர் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பலவேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, வெடிவிபத்து ஏற்படாமல் தடுக்க கடுமையான விதிமுறைகளை அமல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை விடுத்துள்ளார். அதேபோல், அ.ம.மு.க.வின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், பட்டாசு ஆலை விபத்துகளைத் தடுக்க பாதுகாப்பு விதிகளை அரசு முறையாகக் கண்காணிக்க வேண்டும் என்றார்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்ற விபத்துகள் ஈ.பி.எஸ். ஆட்சியில் சாதாரணமாகி விட்டது. உயிரிழப்புகளுக்கு போதிய நிவாரணம் கொடுப்பதும், விபத்துகள் தொடராமல் தடுப்பதும் அவசியம்" என்று தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 3 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "விருதுநகர்-சாத்தூரில் இன்று நிகழ்ந்த தனியார் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 10- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். இத்துயரச் சம்பவத்தில், உயிரிழந்தவர்கள் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டு காயமுற்றோர் விரைவில் பூரணநலம்பெற இறைவனை வேண்டுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், 12 பேர் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். வெடி விபத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். வெடி விபத்தால் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்கள் விரைவில் பூரண நலம்பெற இறைவனை வேண்டுகிறேன். மேலும், பட்டாசுத் தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள் அனைவருக்கும் ஒரு பாதுகாப்பான சூழ்நிலை ஏற்பட வேண்டும் எனவும் வேண்டுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் இரங்கல் செய்தியில், "பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் காயமடைந்தவர்கள் பூரண நலம்பெற பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூபாய் 2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூபாய் 50,000 வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பட்டாசு ஆலை விபத்து வருத்தம் அளிக்கிறது. விபத்தில் காயமடைந்தோர் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி., மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோரும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.