
தொன்மை வாய்ந்த, விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நடைபெறும் குடமுழுக்கு விழாவைத் தமிழ் அர்ச்சனையுடன் நடத்த வேண்டுமென தெய்வத் தமிழ் பேரவையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் அமைந்துள்ளது ஆயிரம் ஆண்டுகள் தொன்மை வாய்ந்த விருத்தகிரீஸ்வரர் திருக்கோவில். 'காசியை விட வீசம் பெரிசு விருத்தகாசி' என போற்றப்படும் இத்திருக்கோவில் பஞ்சாட்சர முறைப்படி ஜந்து கோபுரம், ஜந்து பரிகாரம், ஜந்து கொடிமரம், ஐந்து தீர்த்தம், ஐந்து தேர், ஜந்து நந்தி, ஐந்து மண்டபம் என ஐந்தின் சிறப்பாக சிறப்பம்சத்துடன் அமைந்துள்ளது. இத்திருத்தலத்தில் 12 ஆண்டுகளுக்குப் பின்பு, வருகின்ற பிப்ரவரி 06-ஆம் தேதி திருக்குடமுழுக்கு நடைபெற உள்ளது.

இந்நிலையில் தெய்வத் தமிழ் பேரவை சார்பில் தமிழ் தேசிய பேரியக்க பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் தலைமையில் திருக்குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும் என்று திருக்கோவிலின் செயல் அலுவலர் முத்துராஜாவிடம் மனு அளிக்கப்பட்டது.
அம்மனுவில் 'சமஸ்கிருதத்திற்கு இணையாக, தமிழிலும் அர்ச்சனை செய்யப்பட வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், குடமுழுக்கு விழா நடத்தப்பட வேண்டும். வேள்வி சாலை பூஜை, கலச பூஜை, கருவறை பூஜை உள்ளிட்டவைகளில், சம அளவில் தமிழில் அர்ச்சனை இடம்பெற வேண்டும். தமிழில் அர்ச்சனை செய்யக் கூடிய நபர்களின் பெயர்களைத் தெரிவிக்க வேண்டும்' என்று மனுவில் கோரிக்கையாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து சம்பந்தப்பட்ட துறை உயரதிகாரிகளுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என செயல் அலுவலர் முத்துராஜா கூறினார்.
இதில் தெய்வத்தமிழ்ப் பேரவை கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணிய சிவா, தமிழ் தேசிய பேரியக்கம் மாநில செயற்குழு உறுப்பினர் முருகன்குடி முருகன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.