கரோனா நோய்ப் பரவலை தடுக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் ஜூலை 31-ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பித்து நடைமுறையில் உள்ளது. அதே சமயம் தமிழ்நாட்டில் சில தளர்வுகளுடன் இந்த ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் ஜூலை 5ஆம் தேதியான ஞாயிற்றுக்கிழமை பொது ஊரடங்கு முழுமையாகக் கடைப்பிடிக்கப்பட்டது.

Advertisment

கடலூர் மாவட்டத்தில் 99% ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. மருந்தகங்கள் தவிர மற்ற அனைத்துக் கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டன. அவசரத்திற்கான போக்குவரத்து தவிர மற்ற அனைத்துப் போக்குவரத்துகளும் தடை செய்யப்பட்டன. கடலூரில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாததால் துறைமுகங்களில் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டன.

Advertisment

இதனிடையே கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகர வர்த்தகர்கள் நலச் சங்க ஆலோசனைக் கூட்டம் விருத்தாசலத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத் தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். செயலாளர் வாசு.சுந்தரேசன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் விருத்தாசலம் பகுதியில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் காரணத்தால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் நலன் கருதியும், கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நோக்கத்திலும் ஜூலை 6 திங்கட்கிழமை முதல் வருகிற 15-ஆம் தேதி வரை விருத்தாசலம் நகரில் அனைத்துக் கடைகளும் திறக்கப்பட்டிருக்கும் நேரத்தைக் குறைக்க முடிவு செய்யப்பட்டது.

Advertisment

அதன்படி ஜூலை 6 திங்கட்கிழமை முதல் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டும் விருத்தாசலம் நகரில் கடைகள் திறக்கப்பட்டிருக்கும் எனத் தீர்மானிக்கப்பட்டது.

http://onelink.to/nknapp

முன்னதாக சாத்தான்குளம் சம்பவத்தில் உயிரிழந்த வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் மறைவுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. கூட்டத்தில் விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த வர்த்தக சங்க நிர்வாகிகள், வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர்.