virudhachalam incident

விருத்தாசலம் அருகே தூக்கிட்டுத்தற்கொலை செய்வதற்கு முன் வரதட்சணை கொடுமையால் தான் தற்கொலை செய்துகொள்வதாகபெண் வெளியிட்டவீடியோ சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள எருமனுார் கிராமத்தைச் சேர்ந்தவிஜயகுமார்(24) என்பவருக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டம் நீலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஷோபனா (21) என்பவருக்கும் கடந்த இரண்டரை வருடத்திற்கு முன்பு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் ஆகி ஒன்றரை வயதில் விஷோத் என்ற மகன் உள்ளார்.

திருமணத்தின்போது ஷோபனாவின் பெற்றோர் 50 பவுன் தங்க நகை, 2 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் திருமணத்திற்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் சீர் வரிசையாக வழங்கி, திருமணம் முடித்துள்ளனர். பி.இ படித்த விஜயகுமார் சென்னையில் ஐ.டி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். கரோனா ஊரடங்கு காரணமாக வேலை இல்லாமல் தற்போது வீட்டில் இருந்து வருகிறார். அதனால் விஜயகுமார் மற்றும் அவரது தாயார் மேலும் பணம், நகைகள் கேட்டு ஷோபனாவை அடிக்கடி துன்புறுத்தி வந்துள்ளனர். மேலும் விஜயகுமாருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஷோபனாவை அடித்து விரட்டுவதிலேயே விஜயகுமார் நோக்கமாக இருந்துள்ளார் என்று கூறப்படுகிறது.

Advertisment

இந்நிலையில் நேற்று (15.07.2020) அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஷோபனா தனது சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து அறிந்த அவரது உறவினர்கள் விருத்தாசலம் காவல் துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் ஷோபனாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் ஷோபனா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு சேலையைக் கழுத்தில் கட்டி தொங்கவிட்டபடியே வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் "அம்மா என்னை மன்னித்துவிடுங்கள். என்னை வரதட்சணைக் கேட்டு கணவர், மாமனார், மாமியார் ஆகியோர் அடித்துத் துன்புறுத்துகின்றனர். அந்தப் பெண்ணை வீட்டிற்குக் கொண்டு வரும் நோக்கில் என்னை கொடுமைப்படுத்துகின்றனர். வீட்டின் கதவைப் பூட்டிவிட்டு உள்ளே வைத்து அடிக்கின்றனர். அம்மா.... உன்னை நம்பி தான் என் மகனை விட்டு விட்டுச் செல்கிறேன். என்னைக் காப்பாற்றியது போல் எப்படியாவது அவனையும் காப்பாற்றிபெரிய ஆளாக ஆக்குங்கள்.

என்னால் இனிமேல் உயிரோடு வாழவே முடியாது. என் உடலை அப்பாவின் உடலுக்கு அருகில் புதையுங்கள். அப்பா ஆசைப்பட்டது போல் என் உடலையும் உடல் உறுப்பு தானத்திற்குக் கொடுத்துவிடுங்கள். பெட்டியில் குறிப்பிட்ட இடத்தில் நகைகள் வைத்துள்ளேன் அதனை எடுத்து என் மகனுக்காகச் செலவு செய்யுங்கள். சில வீடியோக்கள் என் மெயில் அக்கவுண்டில் உள்ளது. அதனையும் சாட்சியாக எடுத்துக் கொள்ளுங்கள். என் சாவுக்குக் காரணமானவர்களைச் சும்மா விடாதீர்கள். அம்மா உங்களை நம்பித்தான் செல்கிறேன்" என அழுதுகொண்டு தன் மகன் அருகில் உறங்கியபடி உள்ள வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.