விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட பெண் பலியான விவகாரம் தொடர்பாக எடுத்த நடவடிக்கை குறித்த அறிக்கையை 2 வாரங்களில் தாக்கல் செய்ய கடலூர் மாவட்ட மருத்துவப்பணிகள் துறை இணை இயக்குனருக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

virudhachalam district govt hospital human rights commission

கடலூர் மாவட்டம், கலர்குப்பத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் பிரியா, பிரசவத்திற்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பெற்றெடுத்த நிலையில், வயிற்றில் வீக்கம் ஏற்பட்டதால் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரசவத்தின்போது வயிற்றில் பஞ்சு வைத்து தைத்ததால், பிரியா உயிரிழந்ததாக குற்றம் சாட்டிய உறவினர்கள், விருதாச்சலம் மருத்துவமனையில் போராட்டம் நடத்தினர்.

இது குறித்து நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில், மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. பிரியா உயிரிழந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 2 வாரங்களில் அறிக்கை அளிக்க கடலூர் மாவட்ட மருத்துவப்பணிகள் இணை இயக்குநருக்கு மனித உரிமை ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.