Skip to main content

மாணவியின் தந்தை தீக்குளிக்க முயற்சி? உண்மையை விளக்கும் மாவட்ட எஸ்.பி! 

Published on 21/07/2022 | Edited on 21/07/2022

 

Viral video about Kallakurichi student's father

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு பயின்றுவந்த மாணவி கடந்த 13ம் தேதி மரணமடைந்தார். இந்த மரணம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி விசாரணை நடந்துவருகிறது. 

 

இந்நிலையில், மாணவியின் தந்தை நீதிகேட்டு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்ததாக ஒரு வீடியோ சமூகவலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. 

 

இது தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி. பகலவன், “மாணவியின் தந்தை நீதிகேட்டு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்வது போன்ற வீடியோ ஒன்று சமூகவலைதளத்தில் பரவிவருகிறது. இது சம்பந்தமாக விசாரணை செய்த போது, இந்த வீடியோ நாகப்பட்டினம் மாவட்டம், திருக்கண்ணபுரம் காவல் சரகம் பெருநாட்டான்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரன் குடும்பத்தினருக்கும், அவரது பக்கத்து வீடான முனுசாமி குடும்பத்தினருக்கும் வேலி பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டு, இருதரப்பினர் மீதும் வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.  

 

Viral video about Kallakurichi student's father

 

இந்நிலையில், 14.07.2022-ந் தேதி தேவேந்திரன் என்பவர் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தான் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லையென தீக்குளிக்க முயற்சித்த போது பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பான வீடியோ பதிவே அது என்பது தெரியவருகிறது.

 

இந்த சம்பவத்தை வேறு விதமாக திசைதிருப்பி கனியாமூர் சக்தி பள்ளியில் இறந்து போன மாணவியின் தந்தை நீதி கேட்டு தீக்குளிக்க முயற்சி செய்வது போன்று பொய்செய்தியை, மக்கள் மத்தியில் கிளர்ச்சியை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்திலோ அல்லது காவல்துறை மீது கலங்கம் விளைவிக்கும் நோக்கத்திலோ பரப்பிவருகின்றனர். 

 

இதுபோன்ற சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார். 
 

 

 

சார்ந்த செய்திகள்