Advertisment

பெண்களுக்கு எதிராகத் தமிழகக் காவல்துறையின் அத்துமீறல்! அதிர்ச்சியளிக்கும் உண்மைகள்! 

Violation of Tamil Nadu Police against women! Shocking facts!

Advertisment

தேசிய குற்ற ஆவண மையத்தின் (NCRB) 2020ஆம் ஆண்டுக்கான அறிக்கை 15.09.2021 அன்று வெளியாகியுள்ளது. இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "மூன்று தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையின் மூன்றாவது தொகுதியில் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் (IPC) கீழ்வரும் குற்றங்களுக்காக 2020 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மாநிலம் வாரியாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாடு தொடர்பாக வெளியாகியிருக்கும் விவரங்கள் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன.

சிறார்கள் மீதான தாக்குதல்:

தமிழ்நாட்டில் 2020ஆம் ஆண்டில் மட்டும் 18 வயதுக்குக் குறைவான சிறார்கள் 3309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் சிறார்களைக் கைது செய்திருக்கும் மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கிறது.

இளம்பெண்கள் மீது ஈவிரக்கமற்ற தாக்குதல்:

Advertisment

18 வயதிலிருந்து 30 வயதுக்குட்பட்டவர்கள் எத்தனை பேர் கைது செய்யப்பட்டார்கள் என்ற விவரம் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 2020ஆம் ஆண்டில் மட்டும் அந்த வயது கொண்டோரில் தமிழ்நாட்டில் 5,39,967 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் ஆண்கள் 5,14,656 பேர், பெண்கள் 25, 311 பேர். இந்தியாவிலேயே அதிகமான இளம்பெண்கள் கைது செய்யப்பட்டிருப்பது தமிழ்நாட்டில்தான்.

ஒட்டுமொத்தமாக இந்தியாவிலுள்ள 28 மாநிலங்களையும் சேர்த்து 78,309 இளம்பெண்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அதில் தமிழ்நாட்டில் மட்டும் 25,311 பேர். ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கினர் (32.32%) தமிழ்நாட்டில் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதுபோலவே 30 வயது முதல் 45 வயதுக்குட்பட்டவர்களில் 4,83,236 ஆண்களும்; 33,960 பெண்களும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்தப் பிரிவிலும்கூட இந்தியாவிலேயே மிக அதிகமாகப் பெண்கள் கைது செய்யப்பட்டிருப்பது தமிழ்நாட்டில் தான். அதுவும் இந்தியா முழுவதும் ஒட்டுமொத்தமாகக் கைது செய்யப்பட்ட பெண்களில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்காக இருக்கிறது.

45 வயதிலிருந்து 60 வயதுக்குட்பட்ட பிரிவினரில் 2,29,311 ஆண்களும்; 18,276 பெண்களும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்தப் பிரிவிலும் கூட இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் பெண்கள் கைது செய்யப்பட்டிருப்பது தமிழ்நாட்டில்தான். இந்தியாவிலுள்ள 28 மாநிலங்களில் ஒட்டுமொத்தமாகக் கைது செய்யப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 42,391. ஏறத்தாழ அதில் பாதி அளவு பெண்கள் தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

மூதாட்டிகள் மீதும் அடக்குமுறை:

60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பிரிவில் 35,118 ஆண்களும் 2601 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தப் பிரிவிலும் கூட இந்தியாவிலேயே அதிகமாகப் பெண்களைக் கைது செய்திருப்பது தமிழ்நாட்டில்தான். ஒட்டு மொத்த இந்தியாவில் கைது செய்யப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 5509. அதில் சுமார் பாதி அளவு பெண்கள் தமிழ்நாட்டில் மட்டும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக 2020ம் ஆண்டில் தமிழ்நாட்டில் 12,65,627 ஆண்களும்; 80,151 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை இந்தியாவிலேயே மிக மிக அதிகமாகும். அதிமுக ஆட்சியின் கடைசி ஆண்டில் மக்களுக்கு எதிராக மிக மோசமான முறையில் காவல்துறை அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டிருந்ததையே இது காட்டுகிறது. ஒருவரை கைது செய்யும்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளை டி.கே.பாசு எதிர் மேற்கு வங்க மாநில அரசு என்ற வழக்கில் (1996) உச்சநீதிமன்றம் தெளிவாக வரையறுத்துள்ளது. அது இந்தக் கைது நடவடிக்கைகளின்போது பின்பற்றப்பட்டதாகத் தெரியவில்லை.

கண்மூடித்தனமான கைது நடவடிக்கை கூடாது:

உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.கே.கவுல் மற்றும் ரிஷிகேஷ் ராய் அமர்வு கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி பிறப்பித்த ஆணையில், ‘கைது செய்யும் அதிகாரம் இருக்கிறது என்பதற்காகவே ஒருவரைக் கைது செய்வது கூடாது. அது ஒருவரது மனித உரிமைகளைப் பறிப்பதாகும்’ எனக் குறிப்பிட்டுள்ளது. ‘குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யும்போது குற்றம் சாட்டப்பட்டவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தவேண்டும் என குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 170ஐ விசாரணை நீதிமன்றங்கள் தவறாகப் புரிந்துகொண்டுள்ளன’ எனக் குறிப்பிட்டுள்ள நீதிபதிகள், “குற்றம் சாட்டப்பட்டவரைக் காவலில் எடுத்து விசாரிப்பது அவசியம் என்றாலோ, அவர் சாட்சிகளைக் கலைப்பார் அல்லது தலைமறைவாகிவிடுவார் என்றாலோ மட்டும்தான் கைது செய்யவேண்டும்” எனத் தெளிவுபடுத்தியுள்ளனர்.

முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா?:

காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் தமிழ்நாடு முதலமைச்சர், அதிமுக ஆட்சியிலிருந்ததுபோல தனது ஆட்சியில் காவல்துறை கண்மூடித்தனமாகக் கைது நடவடிக்கையில் ஈடுபட அனுமதிக்க மாட்டார் என நம்புகிறேன். காவல்துறையினருக்குக் கைது நடவடிக்கை குறித்த முறையான வழிகாட்டுதலை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார் ரவிக்குமார்.

ravikumar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe