Skip to main content

பெண்களுக்கு எதிராகத் தமிழகக் காவல்துறையின் அத்துமீறல்! அதிர்ச்சியளிக்கும் உண்மைகள்! 

Published on 17/09/2021 | Edited on 17/09/2021

 

Violation of Tamil Nadu Police against women! Shocking facts!

 


தேசிய குற்ற ஆவண மையத்தின் (NCRB) 2020ஆம் ஆண்டுக்கான அறிக்கை 15.09.2021 அன்று வெளியாகியுள்ளது. இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

 

அதில், "மூன்று தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையின் மூன்றாவது தொகுதியில் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் (IPC) கீழ்வரும் குற்றங்களுக்காக 2020 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மாநிலம் வாரியாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாடு தொடர்பாக வெளியாகியிருக்கும் விவரங்கள் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன. 

 

சிறார்கள் மீதான தாக்குதல்: 


தமிழ்நாட்டில் 2020ஆம் ஆண்டில் மட்டும் 18 வயதுக்குக் குறைவான சிறார்கள் 3309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் சிறார்களைக் கைது செய்திருக்கும் மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கிறது.

இளம்பெண்கள் மீது ஈவிரக்கமற்ற தாக்குதல்: 


18 வயதிலிருந்து 30 வயதுக்குட்பட்டவர்கள் எத்தனை பேர் கைது செய்யப்பட்டார்கள் என்ற விவரம் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 2020ஆம் ஆண்டில் மட்டும் அந்த வயது கொண்டோரில் தமிழ்நாட்டில் 5,39,967 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் ஆண்கள் 5,14,656 பேர், பெண்கள் 25, 311 பேர். இந்தியாவிலேயே அதிகமான இளம்பெண்கள் கைது செய்யப்பட்டிருப்பது தமிழ்நாட்டில்தான்.

 

ஒட்டுமொத்தமாக இந்தியாவிலுள்ள 28 மாநிலங்களையும் சேர்த்து 78,309 இளம்பெண்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அதில் தமிழ்நாட்டில் மட்டும் 25,311 பேர். ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கினர் (32.32%)  தமிழ்நாட்டில் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 

அதுபோலவே 30 வயது முதல் 45 வயதுக்குட்பட்டவர்களில் 4,83,236 ஆண்களும்; 33,960 பெண்களும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்தப் பிரிவிலும்கூட  இந்தியாவிலேயே மிக அதிகமாகப் பெண்கள் கைது செய்யப்பட்டிருப்பது தமிழ்நாட்டில் தான். அதுவும் இந்தியா முழுவதும் ஒட்டுமொத்தமாகக் கைது செய்யப்பட்ட பெண்களில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்காக இருக்கிறது. 

 

45 வயதிலிருந்து 60 வயதுக்குட்பட்ட பிரிவினரில் 2,29,311 ஆண்களும்; 18,276 பெண்களும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்தப் பிரிவிலும் கூட இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் பெண்கள் கைது செய்யப்பட்டிருப்பது தமிழ்நாட்டில்தான். இந்தியாவிலுள்ள 28 மாநிலங்களில் ஒட்டுமொத்தமாகக் கைது செய்யப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 42,391. ஏறத்தாழ அதில் பாதி அளவு பெண்கள் தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

 

மூதாட்டிகள் மீதும் அடக்குமுறை: 


60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பிரிவில் 35,118 ஆண்களும் 2601 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தப் பிரிவிலும் கூட இந்தியாவிலேயே அதிகமாகப் பெண்களைக் கைது செய்திருப்பது தமிழ்நாட்டில்தான். ஒட்டு மொத்த இந்தியாவில் கைது செய்யப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 5509. அதில் சுமார் பாதி அளவு பெண்கள் தமிழ்நாட்டில் மட்டும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக 2020ம் ஆண்டில் தமிழ்நாட்டில் 12,65,627 ஆண்களும்; 80,151 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை இந்தியாவிலேயே மிக மிக அதிகமாகும். அதிமுக ஆட்சியின் கடைசி ஆண்டில் மக்களுக்கு எதிராக மிக மோசமான முறையில் காவல்துறை அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டிருந்ததையே  இது காட்டுகிறது. ஒருவரை கைது செய்யும்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளை டி.கே.பாசு எதிர் மேற்கு வங்க மாநில அரசு என்ற வழக்கில் (1996) உச்சநீதிமன்றம் தெளிவாக வரையறுத்துள்ளது. அது இந்தக் கைது நடவடிக்கைகளின்போது பின்பற்றப்பட்டதாகத் தெரியவில்லை. 

 

கண்மூடித்தனமான கைது நடவடிக்கை கூடாது: 


உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.கே.கவுல் மற்றும் ரிஷிகேஷ் ராய் அமர்வு கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி பிறப்பித்த ஆணையில், ‘கைது செய்யும் அதிகாரம் இருக்கிறது என்பதற்காகவே ஒருவரைக் கைது செய்வது கூடாது. அது ஒருவரது மனித உரிமைகளைப் பறிப்பதாகும்’ எனக் குறிப்பிட்டுள்ளது. ‘குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யும்போது குற்றம் சாட்டப்பட்டவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தவேண்டும் என குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 170ஐ விசாரணை நீதிமன்றங்கள் தவறாகப் புரிந்துகொண்டுள்ளன’ எனக் குறிப்பிட்டுள்ள நீதிபதிகள், “குற்றம் சாட்டப்பட்டவரைக் காவலில் எடுத்து விசாரிப்பது அவசியம் என்றாலோ, அவர் சாட்சிகளைக் கலைப்பார் அல்லது தலைமறைவாகிவிடுவார் என்றாலோ மட்டும்தான் கைது செய்யவேண்டும்” எனத் தெளிவுபடுத்தியுள்ளனர். 

முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா?: 


காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் தமிழ்நாடு முதலமைச்சர், அதிமுக ஆட்சியிலிருந்ததுபோல தனது ஆட்சியில் காவல்துறை கண்மூடித்தனமாகக் கைது நடவடிக்கையில் ஈடுபட அனுமதிக்க மாட்டார் என நம்புகிறேன். காவல்துறையினருக்குக் கைது நடவடிக்கை குறித்த முறையான வழிகாட்டுதலை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்"  என்று தெரிவித்திருக்கிறார் ரவிக்குமார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழிசையை குடியரசு தலைவர் வேட்பாளராக ஏற்க மாட்டோம் - ரவிக்குமார் உறுதி

Published on 04/02/2022 | Edited on 04/02/2022

 

ரதக


குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக சார்பாக தமிழிசை நிறுத்தப்பட்டால் அவரை ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

 

இந்தியாவில் ஜூலை மாதம் குடியரசு தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. 5 மாநில தேர்தல் முடிந்ததும் இதற்கான ஏற்பாடுகள் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் தற்போது மத்திய அரசு குடியரசுத்தலைவர் தேர்தலில் தமிழகத்தை சேர்ந்த தமிழிசையை வேட்பாளராக அறிவிக்க இருக்கிறது என்ற ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. 

 

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில், பலரும் இந்த தகவலை மேற்கோள்காட்டி கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், இதுதொடர்பாக பேசிய வி.சி.க எம்.பி ரவிக்குமார், "தமிழிசை ஒருவேளை குடியரசு தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டால் ஏற்க மாட்டோம். தமிழகத்தைச் சேர்ந்த பாஜக அல்லாத வேறு ஒரு நல்ல வேட்பாளரை தமிழக முதல்வர் குடியரசு தலைவர் தேர்தலில் முன்மொழிய வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார். 

 

 

Next Story

''உலகிலேயே மிகப்பெரிய அரசியலமைப்பு சாசன சட்டத்தை உருவாக்கியவர் அம்பேத்கர்'' -ரவிக்குமார் எம்.பி பேச்சு!

Published on 26/11/2021 | Edited on 26/11/2021

 

'' Ambedkar is the creator of the largest constitutional law in the world '' Ravi Kumar MP speech!


அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர் இருக்கை சார்பில் இந்திய அரசியலமைப்பு தின நிகழ்ச்சி நடைபெற்றது. மொழிப்புல முதல்வர் முத்துராமன் வரவேற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கதிரேசன் விழாவைத் துவக்கி வைத்துப் பேசினார்.

 

சிறப்பு விருந்தினராக விழுப்புரம் பாராளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிப் பேசுகையில், ''இந்த பல்கலைக்கழகம் தமிழ் மொழிக்காக அமைக்கப்பட்ட பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்தைச் சிதம்பரத்தில் தான் அமைக்க வேண்டும் என்று 1933-ஆம் ஆண்டு அப்போது சட்ட மேலவை உறுப்பினராக இருந்த சுவாமி சகஜானந்தா, பல்கலைக்கழகம் அமைக்க இடத்தை பார்வையிட வந்த குழுவினரிடம் வலியுறுத்தியதன் பேரில் இங்கு தமிழுக்காக இந்த பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது'' என்றார்.

 

மேலும் அவர் பேசுகையில், ''அம்பேத்கர் இந்திய அரசியல் அமைப்பு சாசனம் அமைக்கும் அமர்வுக்கு வருவதற்கு பல்வேறு போராட்டங்களையும் இன்னல்களையும் கடந்து வந்துள்ளார். எதுவுமே எளிதாக கிடைத்துவிடவில்லை. அப்படி வந்தவர் அமர்வுக்குத் தலைவரானார். உலகத்திலே மிகப்பெரிய அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்து வழங்கியுள்ளார். எனவே அரசியல் அமைப்பு சட்டத்தை இயற்றி வழங்கிய இந்த நாளை போற்றி உறுதியேற்போம்'' என அவர் பேசினார்.

 

இதனைத் தொடர்ந்து காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன், உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரபாகரன், பல்கலைக்கழக கடல் வாழ் உயிரின ஆராய்ச்சி மைய முதல்வர்  ஸ்ரீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டு அண்ணல் அம்பேத்கர் இந்த நாட்டு மக்களின் அடிப்படை உரிமைக்கு எவ்வாறு குரல் கொடுத்துள்ளார் என்பதை விளக்கிப் பேசினார்கள்.

 

பல்கலைக்கழக  அம்பேத்கர் இருக்கையின் சார்பில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம்-2021 தொடர்பான விழிப்புணர்வு சுவரொட்டி போட்டியில் பரிசு பெற்ற மாணவர்களுக்கு பணப்பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை அம்பேத்கர் இருக்கையின் பேராசிரியர் சௌந்தரராஜன் ,துணை பேராசிரியை.ராதிகாராணி செய்திருந்தனர். இவ்விழாவில் பல்கலைக்கழக புல முதல்வர்கள், இயக்குநர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் திரளாகப் பங்கேற்றனர்.